செங்காளியப்பன்

bookmark

இளம்பருவம்:

பல்லடம் அருகே மல்லகவுண்டன்பாளையம் எனும் சிற்றூரில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் ராம கவுண்டர் பழனியம்மாள் தம்பதியருக்கு 1926ஆம் ஆண்டில் பிறந்தவர் செங்காளியப்பன். கோவையில் ஒரு பஞ்சாலையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினார். காலப் போக்கில் மகாத்மா காந்தியடிகளின் வழிகளைப் பின்பற்றி தேச சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1942 ஆகஸ்ட்டில் இந்தியா முழுவதும் பற்றி எரிந்த "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்ட போது இவருக்கு வயது 16. சூலூர் விமான தளம் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 1943 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, இவர் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அலிப்பூர் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் இவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு உயிருக்குப் போராடினார். கிட்டத்தட்ட உயிர் பிரிந்து விட்டது என்று சொல்லும் அளவில் இவர் எலும்பும் தோலுமாக அலிப்பூர் சிறையில் வயிற்றுக் கடுப்பு நோய் பிரிவில் துணியால் மூடப்பட்டு கிடத்தப்பட்டிருந்தார். அந்தச் சிறையில் அடைபட்டிருந்த எல்லா கைதிகளும், தங்கள் உணவை மறந்து, இந்த ஒரு உயிருக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டதின் விளைவு அன்றிரவு வேகு நேரத்துக்குப் பின் அவர் அபாய கட்டத்தைத் தாண்டினார்.



சுதந்திர போராட்டத்தில் இவரின் பங்கு:

சிறையிலிருந்து வெளியே வந்த செங்காளியப்பன் தொடர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபடத் தொடங்கினார். தொழிலாளர் நலனுக்காக அவர்கள் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காகப் போராடும் பணியோடு, நாட்டின் விடுதலையையும் அவர் மற்றொரு கண்ணாக எண்ணி பாடுபட்டார். வெள்ளை வெளேர் என்ற கதராடை, அரைக்கை சட்டை, நெற்றியில் வெள்ளை திருநீறு, சிரித்த முகம், அமைதியான பண்பு இவற்றோடு இவர் வலம் வந்து தொழிலாளர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார். இவரை அனைவருமே "தொழிலாளர் தோழர்" என்றே அழைத்தனர்.

தியாகசீலர்களின் உழைப்பாலும், அவர்களது வியர்வையாலும், தியாகத்தாலும், ரத்தத்தாலும் 1947 ஆகஸ்ட் 15இல் நாடு சுதந்திரம் பெற்றது. என்றாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர இவரது பணி தொடர்ந்து நடந்தது. 1962இல் நடந்த பொதுத் தேர்தலில் இவர் பல்லடம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கோவை பகுதி தொழிலாளர்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்த என்.ஜி.ராமசாமி அவர்களின் ஆன்மா இவரை ஆசி வழங்கி வாழ்த்தியிருக்கும்.

இவருடைய பெரு முயற்சியால் தியாகி என்.ஜி.ராமசாமிக்கு சிங்காநல்லூரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. இவரது சட்டசபைப் பணிகளின்போது தொழிலாளர்கள் நலத்துக்காக இவர் பங்கேற்ற விவாதங்களும், இவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களும் ஏராளம்.