எழுச்சிப் படலம் - 884
கூனுங் குறளும் சிந்தரும் செல்லுதல்
884.
கூனொடு குறளும். சிந்தும்.
சிலதியர் குழாமும். கொண்ட
பால் நிறப் புரவி அன்னப்
புள் எனப் பாரில் செல்ல.
தேனொடு மிஞிறும் வண்டும்
தும்பியும் தொடர்ந்து செல்லப்
பூ நிறை கூந்தல் மாதர்
புடை பிடி நடையில் போனார்.
கூனொடு குறளும் - கூனர்களும். குறளர்களும்; சிந்தும் -
சிந்தர்களும்; சிலதியர் குழாமும் - தோழியர் கூட்டமும்; கொண்ட -
ஏறிய; பால் நிறப் புரவி - பால் போன்ற நிறத்தையுடைய குதிரைகள்;
அன்னப் புள் என- அன்னப் பறவையைப் போல; பாரில் செல்ல
- நிலத்தில் நடந்து போக; தேனொடு - தேன் வண்டுகளும்; மிஞிறும்
- மிஞிறுகளும்; வண்டும் - மற்றை வண்டுகளும்; தும்பியும் - தும்பி
என்னும் வண்டுகளும்; தொடர்ந்துசெல்ல - பின் தொடர்ந்து போக;
பூநிறை கூந்தல் மாதர் - மலர்கள் நிறைந்த கூந்தலை யுடைய மகளிர்;
புடை - பக்கங்களின்; பிடி நடையில் போனார் - பெண் யானை
போன்ற நடையிலே நடந்து சென்றார்கள்.
குறளர்: குள்ளர். சிந்தர்: குறளரைக் காட்டிலும் சிறிது பெரியவர்கள்.
வண்டும் தேனும் நல்மணமுடைய பூக்களில் படியும்; தும்பியும்
மிஞிறும் எல்லா மணத்திலும் செல்லக் கூடியன என்பர்
நச்சினார்க்கினியர் (சீவக. 893 உரை) 68
