சர்தார் வல்லபாய் படேல்
சர்தார் வல்லபாய் படேல்
👉 சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும்.
👉 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்கவும், நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையை எதிர்த்து நிற்கும் திறனை உறுதி செய்யவும், இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
குடும்பம் :
👉 இவரது தந்தை ஜாவேரிபாய் படேல் (Jhaverbhai Patel), தாய் லாட்பா (Ladba). இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் படேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும், தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால், ஏழை மக்களின் மீது மிகவும் கரிசனம் கொண்டவராக இருந்தார்.
👉 இவரது தந்தை சுவாமிநாராயணனின் தீவிர பக்தராக இருந்தார். எனவே, தனது குழந்தைகளை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயணன் கோவிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது வல்லவாய் படேலின் உடலை கட்டுகோப்பாகவும், வலிமையாகவும் உருவாக்க உதவியது.
👉 சிறு வயது முதலே படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார். பள்ளியில் படிக்கும்போது தன்னிடமே மாணவர்கள் அனைவரும் புத்தகம் வாங்க வேண்டும் என்று சொன்னார் ஆசிரியர். இது வல்லபாய் படேலுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.
👉 மாணவர்கள் யாரும் அவரிடம் புத்தகங்கள் வாங்கக்கூடாது என அப்போதே போர்க்கொடி தூக்கினார். வேறு வழியின்றி புத்தகங்களை விற்பதை நிறுத்திக்கொண்டார் அந்த ஆசிரியர். வல்லபாய் படேலுக்கு சிறுவயதிலேயே போராடும் குணம் இருந்தது.
👉 வல்லபாய் படேல் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தபோது அவருடைய வயது 22. அதனால் இவரை பொறுப்புகளற்ற இளைஞர் என்று அவரது சகோதரர்கள் குறை கூறினார்கள். இப்படி படித்தால் சாதாரண வேலைதான் கிடைக்கும் எனவும் கேலி செய்தனர்.
👉 ஆனால், வல்லபாய் படேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து கடுமையாக உழைத்து பணம் சேர்த்தார். மேலும், மற்ற வழக்கறிஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து மூன்றே ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார். தனது 25வது வயதில் 'டிஸ்ட்ரிக்ட் பிளீடர்' படிப்பை முடித்து கோத்ராவில் வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார்.
👉 வல்லபாய் படேல் தனது 18வது வயதிலேயே ஜவேர்பா என்ற 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
👉 கோத்ராவில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாததால் நாடியாத் என்ற நகருக்குச் சென்றார். அங்கு அவர் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டார். பின்பு அந்நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார். அங்கும் அவரது தொழில் சரிவர இல்லாததால் போர்சாத் நகருக்கு சென்றுவிட்டார்.
👉 இந்த பகுதியில் ஓரளவு வருவாய் கிடைத்தது. இங்கு 1904ஆம் ஆண்டு வல்லபாய் படேல் ஜவேர்பா தம்பதிக்கு மணிபென் என்ற மகள் பிறந்தாள். பின்பு 1906ஆம் ஆண்டு தாக்யாபாய் என்ற மகன் பிறந்தார்.
👉 இவர் தான் சேர்த்து வைத்த பணத்தை கொண்டு லண்டன் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற முடிவு செய்தார். அப்போது வல்லபாய் படேலின் மூத்த சகோதரர் விதால்பாய் படேல் நான் உன்னைவிட மூத்தவன் அதனால் நான் முதலில் பாரீஸ்டர் ஆகிறேன் என கூறி அவர் படிக்க சென்றுவிட்டார்.
👉 வல்லபாய் படேலும் அதற்கு ஒப்புக்கொண்டார். பின் வல்லபாய் படேலின் மனைவிக்கும், அவரது சகோதரர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டிருந்தது. அந்த சமயம் திடீரென ஜவேர்பாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது உடனிருந்த வல்லபாய் படேல் ஒரு கொலை வழக்கில் வாதாட வெளியூர் சென்றார்.
👉 வல்லபாய் படேல் குற்றம்சாட்டப்பட்ட நபருக்காக கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு தந்தி வந்தது. அதை பார்த்த பின், பைக்குள் வைத்துவிட்டு வழக்கு விசாரணையை தொடர்ந்தார்.
👉 விசாரணை முடிந்து வல்லபாய் படேலுக்கு வெற்றியும் கிடைத்தது. பின் உடன் இருந்தவர்கள் வல்லபாய் படேலிடம், 'உங்களுக்கு ஒரு தந்தி வந்ததே. என்ன விஷயம்' என கேட்டனர். அதற்கு அவர், 'என் மனைவி இறந்துவிட்டார்' என பதில் அளித்தார். 'ஏன் நீங்கள் உடனே செல்லவில்லை' என வருத்தத்துடன் அவர்கள் கேட்டனர். அதற்கு வல்லபாய் படேல், 'என் மனைவி இனி மீண்டும் வரப் போவதில்லை. ஆனால், குற்றமற்ற ஒருவரை காப்பாற்றுவதே எனக்கு முக்கியமாகப்பட்டது,' எனப் பதிலளித்தார். இதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் நெகிழ்ந்து போயினர். இதுவே எந்தளவு அவர் கடமை தவறாமல் இருந்தார் என்பதற்கு உதாரணம்.
👉 ஜவேர்பாவின் மரணம் வல்லபாய் படேலுக்கு பேரிடியாக இருந்தது. மிகவும் மனம் வருந்தினார். அவரது வேதனைக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. ஜவேர்பாவின் மரணத்திற்கு பிறகு மறுமணம் செய்து கொள்ளுமாறு வல்லபாய் படேலை அவரது உறவினர்கள் வற்புறுத்தினர். ஆனால், வல்லபாய் படேல் அதற்கு இணங்கவே இல்லை.
👉 பின்னர் சிறிது சிறிதாக பணம் சேர்த்து சட்டம் பயில லண்டன் புறப்பட்டார். அங்கு அயராது உழைத்து பட்டப்படிப்பில் முதல் மாணவனாக தேறினார். மேலும், பாரீஸ்டர் பட்டமும் பெற்றார். பிறகு நாடு திரும்பிய அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார்.
👉 அதன்பின் வல்லபாய் படேலுக்கு சிறிது காலத்திலேயே பணமும், புகழும் கிடைக்க தொடங்கியது. அந்த சமயம் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் காந்தியடிகள்.
👉 குஜராத் அரசியலில் காந்தி பங்கெடுத்து செயலாற்றிய விதம் வல்லபாய் படேலை பெரிதும் ஈர்த்தது. அவர் முதலில் காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்கவில்லை. நாட்கள் செல்லச்செல்ல வல்லபாய் படேலுக்கு காந்தியடிகளின் மீது ஈர்ப்பு ஏற்பட தொடங்கியது. காந்தி தலைமையில் கோத்ராவில் நடைபெற்ற மாநாட்டு படைகளை கவனிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதில் வல்லபாய் படேல் செயலாளராக பொறுப்பேற்றார்.
👉 1917-ல் குஜராத்தில் கேடா என்ற இடத்தில் கடுமையான பஞ்சத்தில் பாதிக்கப்பட்டனர் விவசாயிகள். அவர்கள் காந்தியிடம் தங்களது பிரச்சனைகளை பற்றி முறையிட்டனர். இதனால் காந்தியடிகள் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்தார். என்னுடன் யார் வருகிறீர்கள் என்று கேட்டதற்கு முதல் குரல் கொடுத்தவர் வல்லபாய் படேல். அன்று விடுதலை போரில் இறங்கியவர் நாடு விடுதலை அடையும் வரை ஓயவில்லை.
👉 ஆங்கிலேய அரசிடம் வரிவிலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, வல்லபாய் படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. இதனால் ஆங்கில அரசு பணிந்தது. வரி ரத்தானது. இதுவே, வல்லபாய் படேலின் முதல் வெற்றி ஆகும்.
👉 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார் காந்தியடிகள். வன்முறைக்கூடாது, படித்தவர்கள் பட்டங்களையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிகளையும், மாணவர்கள் பள்ளியையும் துறக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார். இதன் விளைவாக வல்லபாய் படேல் தனது வழக்கறிஞர் பணியை துறந்தார். குஜராத் முழுதும் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தை பற்றி மக்களிடம் எடுத்துரைத்தார்.
👉 கிளர்ச்சி பெருத்ததால், ஆங்கிலேயே ஆட்சியின் அடக்குமுறை தலைதூக்கியது. இதன் விளைவாக காந்தி கைது செய்யப்பட்டார். காந்தி சிறைக்கு சென்றதால் குஜராத்தில் இயக்கத்தை தலைமை தாங்கும் பொறுப்பு வல்லபாய் படேலுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் குஜராத்தை தாண்டி, வெளியிலும் வல்லபாய் படேலின் புகழ் பரவத் தொடங்கியது.
👉 1922ல் மீண்டும் ஆங்கில அரசுக்கு எதிராக களம் இறங்கினார், வல்லபாய் படேல். இம்முறை குஜராத் மாநிலத்தில் நிலவரி வரைமுறையின்றி உயர்த்தப்பட்டதால் மக்கள் அனைவரும் சொல்லிலடங்கா துயரத்திற்கு ஆளாகினர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கொள்ளையர்களின் அட்டகாசம் துயரத்தை தந்தது.
👉 வல்லபாய் படேல், கொள்ளையர்களை அடக்க கிராம மக்களை கொண்டு தொண்டர் படை அமைத்தார். விளைவு கொள்ளைக்காரர்களின் கொட்டம் அடங்கியது. வரிகொடுக்க முடியாது என மக்கள் பிடிவாதமாக இருந்ததால் ஆங்கில அரசு இறங்கி வந்தது.
👉 ஒருமுறை குஜராத்தில் கடும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வல்லபாய் படேல் 2000 தொண்டர்களை திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.
👉 இதனால் 1000க்கும் மேற்பட்ட மக்கள் காப்பற்றப்பட்டனர். வல்லபாய் படேலின் உதவி மனப்பான்மை பற்றி குஜராத் மாகாணம் முழுக்க பேசப்பட்டது. இதனால் அகமதாபாத் நகராட்சி தலைவர் தேர்தலில் வல்லபாய் படேலை தலைவராக்கினர் மக்கள். அப்போது அவர் கொண்டுவந்த சுகாதார திட்டங்கள் இன்றும் பிரபலமாக உள்ளன.
👉 1928ஆம் ஆண்டு மீண்டும் நிலவரியை 30 சதவீதம் வரை உயர்த்தியது பம்பாய் மாகாண அரசு. மனமுடைந்த விவசாயிகள் வல்லபாய் படேலை சந்தித்து முறையிட்டனர். அதனை அடுத்து தொடங்கியது சத்யாகிரகப் போராட்டம். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சத்யாகிரகத்திற்கு ஆள் திரட்டினார் வல்லபாய் படேல். அடக்குமுறைகளை கையாள தொடங்கியது பிரிட்டிஷ் அரசு. இதற்கெல்லாம் வல்லபாய் படேல் மனம் தளரவில்லை.
👉 போராட்டம் தீவிரமடைந்ததால் வேறு வழியின்றி பிரிட்டிஷ் அரசு இறங்கி வந்தது. பிறகு ஒரு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வரப்பட்டது. படேலின் படை திறமையும், நாடாளும் திறனும் நாடு முழுவதும் அவரை பிரபலமான தலைவராக்கியது. இதற்கு பிறகே இவர் 'சர்தார்' என்று அழைக்கப்பட்டார். சர்தார் என்றால் தலைவர் அல்லது தளபதி என்று பொருள்.
👉 காந்தி 1930ஆம் ஆண்டு மார்ச் 12ம் நாள் சத்யாகிரக யாத்திரைக்கு அழைப்பு விடுத்தார். இதற்கான கூட்டத்தில் தடையை மீறி கலந்துகொள்ள சென்றபோது வல்லபாய் படேல் கைது செய்யப்பட்டார். 3 மாத சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். இதனால் அவரது உடல் எடை குறைந்தது.
👉 காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின்படி வெளிநாட்டு ஆடைகளை துறந்தார் வல்லபாய் படேல். தனது மகனும், மகளும் வைத்திருந்த அந்நிய நாட்டு ஆடைகளையும் தூக்கி எறிந்தார். வல்லபாய் படேல் காந்தியின் தளபதியாக இருந்த போதிலும் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. வல்லபாய் படேல் ஒரு முடிவு எடுத்த பிறகு அதைபற்றி திரும்ப திரும்ப பேசமாட்டார். இவரின் குணத்தை நன்கு அறிந்த காந்தி அவரிடம் நிறைய பொறுப்புகளை கொடுத்தார்.
சுதந்திர இந்தியா :
👉 ஒருமுறை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்காக நேரு கிளம்பியபோது கைது செய்யப்பட்டார். இதுபற்றி தெரிந்துகொள்ள காந்தி, வைசிராயிடம் அனுமதி கேட்டபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, மீண்டும் சத்யாகிரகத்தை ஆரம்பித்தார் காந்தியடிகள்.
👉 அப்போது சர்தார் வல்லபாய் படேலும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரது உடல்நிலை சீர்குலைந்தது. மருத்துவர்கள் முழு ஓய்வு தேவை என்று கூறினர். ஆனால், அவரின் சேவை நாட்டுக்கு தேவை என்பதால் விடுதலை ஆன பிறகு, மனம் தளராமல் மீண்டும் போராட சென்றார்.
👉 அதன்பின்பு 1942ல் மும்பையில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேறியது. காந்தி, 'இது எனது இறுதிப்போர்' என்று அறிவித்தார். ஆனால் மறுநாளே காந்தியடிகள், சர்தார் வல்லபாய் படேல், நேரு உள்ளிட்ட பல தலைவர்களை ஆங்கிலேய அரசு கைது செய்தது.
👉 தலைவர்களின் கைதுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அடிமைத்தனத்தால் உச்சக்கட்ட எரிச்சலைடந்த மக்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். பல தலைவர்கள் தலைமறைவாகினர். இந்தியா முழுவதும் போராட்டங்களே.... இனி இந்த நாட்டை அமைதியாக ஆள முடியாது என்பதை உணர்ந்தது ஆங்கில அரசு. அந்த சமயம் நடந்த இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் தோல்வியை தழுவியது. அதனால் அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி நிலவியது. சிறையில் இருந்த தலைவர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக விடுதலையானார்கள்.
👉 காந்தியடிகள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1946-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 9 மாகாணங்களில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். இந்தியாவில் விடுதலை கோரிக்கை வலியுறுத்தி வருவதை அறிந்த பிரிட்டிஷ் அமைச்சரவையின் தூதுக்குழு இந்தியா வந்தது. நாட்டை பிரித்து பாகிஸ்தானை தனியாக தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் முகமது அலி ஜின்னா. வாரக்கணக்கில் சிம்லாவில் பேச்சுவார்த்தை நீடித்தது.
👉 பிரச்சனை முற்றியதால் கொல்கத்தாவில் கலகம் உண்டானது. கொலை, கொள்ளை என பல கொடூரங்கள் அரங்கேறின. இடைக்கால அரசில் இருந்த லீக் அமைச்சர்கள் நிர்வாகம் செய்யவிடாமல் தடுத்தனர். அமைச்சரவையில் பரப்புரை, சமஸ்தானம், உள்துறை என மூன்று பொறுப்புகளை ஏற்றிருந்தார் வல்லபாய் படேல். பிரிவினையை கடுமையாக எதிர்த்தார்.
👉 கடைசி வைசிராயாக வந்த மௌண்ட்பேட்டன் பிரபு, இந்தியா இருந்த சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு சுறுசுறுப்பாக செயலாற்றினார். இந்திய தலைவர்களுடனும், முஸ்லீம் லீக் தலைவர்களுடனும் பேசி பிரிட்டிஷ் ஆட்சியை முடித்து வைத்தார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு சுதந்திர நாடுகள் தோன்றின. சுதந்திரத்திற்கு பின்தான் சர்தார் வல்லபாய் படேலுக்கு சவாலான பணி தொடங்கியது.
👉 ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேலை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது தொடர்பான ஒரு கடிதத்தை எழுதி அவருக்கு அனுப்பினார். அதற்கு பதிலளித்த வல்லபாய் படேல், எனது வாழ்வில் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். உங்களை போன்ற தியாகத்தை யாரும் செய்ததில்லை. நாட்டின் லட்சியத்தை நிறைவேற்ற அப்பழுக்கற்ற விசுவாசத்தை நான் காட்டுவேன் என்று நேருவுக்கு பதில் கடிதம் எழுதினார்.
👉 நேருவுக்கும், வல்லபாய் படேலுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் இருவரும் எதிரிகளாக நினைத்து கொண்டது இல்லை. இருவரும் மகாத்மா காந்தியின் சீடர்கள் என்ற போதிலும் நேருதான் பிரதமராக பதவியேற்று நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் காந்தியடிகள்தான். நேருவின் கண்ணோட்டம், விஷயங்களை அவர் அணுகும் விதம் மற்றும் உலகளவில் அவருக்கு இருந்த அங்கீகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்தார் காந்தியடிகள்.
👉 காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக 1948ஆம் ஆண்டு மும்பையில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார், வல்லபாய் படேல். அதில், நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்தால் அதை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாம் என பலர் நினைக்கின்றனர். ஆனால், காஷ்மீர் இந்தியாவிற்கு தான் வேண்டும் என்று நினைக்கிறோம். காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் நினைப்பதால் இந்தியாவும் அதை முயற்சிக்கிறது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டாம் என்று அங்கிருக்கும் மக்கள் கருதினால், நாங்கள் அப்போது அங்கு இருக்கவே மாட்டோம். காஷ்மீர் மக்களின் விருப்பத்தை புறக்கணிக்க முடியாது என்று முழங்கினார்.
👉 இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய பிரிட்டிஷ்காரர்கள், சமஸ்தான மன்னர்கள் விரும்பினால் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம் என்ற சிக்கலான முடிவை அறிவித்துவிட்டு சென்றனர். இரண்டுடனும் சேர விரும்பாதவர்கள் சுதந்திர நாடாகவும் செயல்படலாம் என்றும் கூறியிருந்தனர்.
வல்லபாய் படேலின் இரும்பு கரங்கள் :
👉 சுதந்திரம் அடைந்தபின் சர்தார் வல்லபாய் படேல் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அப்பதவிகளில் அவர் ஆற்றிய பணிகள் சாதாரணமானது அல்ல. அப்போது நாடு முழுவதும் மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, சிதறுண்டு கிடந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்தார்.
👉 வல்லபாய் படேலின் இடைவிடாத முயற்சிக்கும், ராஜதந்திரத்திற்கும் இரண்டே ஆண்டுகளில் பலன் கிடைத்தது. பல சமஸ்தானங்கள் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து இந்தியாவுடன் இணைந்தன. ஒரு சில மன்னர்கள் முரண்டு பிடித்தனர். ஆனால், வல்லபாய் படேலின் இரும்பு கரங்களுக்கு முன்பு அவர்கள் அடங்கி போயினர். பல மாகாணங்கள் ஒன்றிணைந்த நிலையில் பிரிட்டிஷ்காரர்களின் சூழ்ச்சி 3 சமஸ்தானங்களில் பலித்தது. காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகிய மூன்றும் சுதந்திர நாடுகளாக இயங்க விரும்பியது.
ஜுனாகத் :
👉 ஜுனாகத் சமஸ்தானத்தை ஆண்ட நவாப் சுதந்திரமாக செயல்பட விரும்பினார். அவரை தன்பக்கம் இழுக்க முயன்றது பாகிஸ்தான். வல்லபாய் படேலின் நடவடிக்கைகளுக்கு பின் ஜுனாகத்தும் இந்தியாவுடன் இணைந்தது.
ஹைதராபாத் :
👉 இந்தியாவுடன் இணைக்குமாறு ஹைதராபாத் நிஜாமிடம் கூறினார் வல்லபாய் படேல். ஆனால் நிஜாமோ தனது ராணுவம் கொண்டு இந்தியாவை மிரட்டினார். இதனால் வல்லபாய் படேல் ஹைதராபாத்தின் மேல் ராணுவ நடவடிக்கை எடுக்க தயாரானார். இதில் நேருவிற்கு உடன்பாடில்லை. ஆனாலும் எதிர்ப்பை ஒடுக்கி சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க ராணுவ நடவடிக்கையே சரி என முடிவெடுத்தார் வல்லபாய் படேல். ராணுவம் பாய்ந்தது ஹைதராபாத் வீழ்ந்தது. தீவிரமான முயற்சிக்கு பின்னர் ஹைதராபாத் சமஸ்தானமும் இந்தியாவின் கீழ் வந்தது.
இந்தியாவுடன் இணைந்த காஷ்மீர் :
👉 காஷ்மீர் சமஸ்தானத்தின் அரசர் ஹரிசிங் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சேராமல் சுதந்திரமாக இருக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், இந்தியாவும், பாகிஸ்தானும் எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தது. 1947ல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. அப்போது மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், பாகிஸ்தான் படைகள் வேகமாக முன்னேறி கொண்டே இருந்தன.
👉 இதனால் அரசர் ஹரிசிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இதன் பொருட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக இணைத்தார். 1947 அக்டோபர் 26ல் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் அரசர் ஹரிசிங் கையெழுத்திட்டார். இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்பின் பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்ட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. பாகிஸ்தான் படைகளின் முற்றுகையை உடைத்து இந்தியப் படைகள் முன்னேறின.
👉 மவுண்ட் பேட்டனின் ஆலோசனையின் பேரில் ஒரு நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அதாவது, 'படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்' என்பதே அது. சர்தார் வல்லபாய் படேல் முதலிய மத்திய அமைச்சரவையின் ஏகமனதான ஒப்புதலோடுதான் அந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. அதன்பின் பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் இந்தியா முறையிட்டது. ஐ.நா.சபையின் தலையீட்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
👉 உள்துறை அமைச்சர் என்ற பெயரில் வல்லபாய் படேல் செய்த இரண்டு காரியங்கள் இன்றளவும் பேசப்படுகிறது.
👉 ஒன்று ICS-க்கு பதிலாக IAS-ஐ உருவாக்கியது. தன்னாட்சி தன்மை கொண்ட ஆணையத்தின் வழியே போட்டித்தேர்வுகளை நடத்தி IAS அதிகாரிகளை உருவாக்க வழிவகை செய்தார் வல்லபாய் படேல்.
👉 அதேபோல் IPS அமைப்பையும் உருவாக்கினார். உள்நாட்டு நிர்வாகத்திற்கும் பாதுகாப்பிற்கும் IAS, IPS அமைப்புகளின் பங்களிப்பு இன்றளவும் தொடர்கிறது. அதன் காரணகர்த்த வல்லபாய் படேல் ஆவார்.
👉 சுதந்திரத்திற்கு பின் காந்தியை கொல்ல பல முயற்சிகள் நடைபெற்றது. அதனால் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க நினைத்தார் வல்லபாய் படேல். ஆனால் இதனை நிராகரித்துவிட்டார் காந்தியடிகள். ஆனால், வல்லபாய் படேலை பார்த்துவிட்டு பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றபோதுதான் சுட்டுக்கொல்லப்பட்டார் காந்தியடிகள். இதனால் மனமுடைந்து போனார் வல்லபாய் படேல். தான் உள்துறை அமைச்சராக இருந்தபோதிலும் காந்தியடிகளை காப்பாற்ற முடியவில்லையே என்று புழுவாய் துடித்தார்.
👉 கடுமையான முகத்தோற்றம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் அசாத்தியமான புத்திக்கூர்மையும், நகைச்சுவை உணர்வும் கொண்டவர். காந்தியடிகள் முதல் அனைவரையும் கிண்டல் செய்வார். சர்தார் வல்லபாய் படேல் பழகுவதற்கு இனிமையானவர். கடமை, செயல் என வந்துவிட்டால் அவரது கடுமை அதிகமாகிவிடும். எதிலும் நிதானத்துடன் செயல்படும் ஆற்றல் உடையவர். வேகம் தேவைப்படும் இடத்தில் அதனை காட்டுவார்.
வல்லபாய் படேலின் மறைவு :
👉 சுமார் அரைநூற்றாண்டு காலம் பொதுவாழ்வில் ஈடுபட்டு வந்த வல்லபாய் படேல் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தனது 75வது வயதில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
👉 இவரது மறைவுக்கு பின் 1991ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
👉 வானளவு உயர்ந்த ஆலமரமும் ஒரு நாள் வீழ்ந்துவிட வேண்டும் என்பது காலத்தின் நியதி. ஆனாலும் இரும்பு மனிதர் என்பதால் இன்றும் தூண்போல் நிலைத்து நிற்கிறது அவரது அயராத உழைப்பும், இந்தியாவை இணைக்க மேற்கொண்ட இடைவிடாத முயற்சியும்.
ஒற்றுமையின் சிலை :
👉 Statue of unity அதாவது 'ஒற்றுமையின் சிலை' என்பது இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் படேலின் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு சிலையாகும்.
👉 இந்த சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சாது நர்மதா அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது.
👉 சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்த நாளன்று ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
👉 இந்த சிலையின் உயரம் 182 மீட்டர். தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளுவர் சிலையைவிட ஏறத்தாழ 5 மடங்கு உயரமானது. இந்த சிலையின் மொத்த எடை சுமார் 67 ஆயிரம் மெட்ரிக் டன்கள்.
👉 இந்த சிலைக்கு உள்ளே கீழ் புறத்தில் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இது படேலின் நினைவாக உருவாக்கப்பட்ட மியூஸியம் ஆகும். இதில் 40,000 அரிய ஆவணங்கள் உள்ளது. 2000க்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளது. இங்கு படேலின் வாழ்க்கையை பறைசாற்றும் பொருட்களும் இருக்கிறது.
ஒற்றுமை சிலையின் சிறப்பம்சங்கள் :
👉 ஒற்றுமை சிலையானது 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும், எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
👉 இந்த சிலையானது ஒரு நொடிக்கு 60 மீட்டர் அளவுக்கு வீசும் காற்றின் எடையினை தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
👉 வல்லபாய் படேல் சிலையின் உட்பகுதி காங்கிரீட் கலவையிலான கட்டுமானம் கொண்டது. சிலையின் வெளிப்பகுதி பித்தளை தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
👉 பத்ம பூஷண் விருது பெற்ற சிற்பி ராம் வி.சுடர் இந்த சிலையை வடிவமைக்கும்போது படேல் சிலையில் சிறப்பு கவனம் செலுத்தி அமைத்துள்ளதாகவும், வல்லபாய் படேலின் 2 ஆயிரம் புகைப்படங்களை வைத்து அவரின் முக அமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
👉 சிலையின் உட்பகுதி வழியாக மேலே செல்வதற்கு இரண்டு லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 லிப்டுகள் மூலம் ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் தலா 40 பேர் வரை செல்ல முடியும்.
👉 மேலும் சிலையின் மார்பு பகுதியில், அதாவது 501 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த 501 அடி உயரத்தில் 200 பேர் வரை நின்று இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
👉 சிலையின் அடித்தளம் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த அடித்தளத்தில் 52 அறைகள் கொண்ட 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. மேலும் அடித்தளத்தில் கண்காட்சி அரங்கம், நினைவுப்பூங்கா, உணவுக்கூடங்கள் என பல அமைக்கப்பட்டுள்ளன.
👉 செல்ஃபி புகைப்படம் எடுப்பதற்காக இந்த இடத்தின் அருகில் பல 'செல்ஃபி பாயிண்ட்' அமைக்கப்பட்டுள்ளன.
