குன்னக்குடி வைத்தியநாதன்
ஆரம்பகால வாழ்க்கை:
1935 இல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.
ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார். அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு காரைக்குடியில் நடந்த இசை நிகழ்வொன்றில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தமையே வைத்தியநாதனின் வயலின் அரங்கேற்றமாகக் கருதப்படுகின்றது. காலங்காலமாக வயலினுடன் மிருதங்கம் வாசிக்கப்பட்டமையில் மாற்றஞ் செய்து வலயப்பட்டி சுப்பிரமணியம் என்பாரின் தவிலுடன் பெருமளவு வயலின் கச்சேரிகளைச் செய்துள்ளார். கருநாடக இசை, திரைப்பட இசை என்பவற்றோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் வயலினில் வாசித்தார்.
திரைப்படத்துறையில் அவரின் பயணம்:
வா ராஜா வா (1969) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதனுக்கு திருமலை தென்குமரி (1970) எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
அவர் இசையமைத்த திரைப்படங்கள்:
-
தெய்வம்
-
மேல்நாட்டு மருமகள்
-
திருவருள்
-
கந்தர் அலங்காரம்
-
அவரின் பிற பங்களிப்புகள் மற்றும் சிறப்புகள்:
தோடிராகம் (1983) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். டி. என். சேஷகோபாலன் இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார். மற்றும் இவர்திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலராக 28 வருடம் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.
மறைவு:
இவர் 2008, செப்டம்பர் 8 ஆம் நாள் தனது 75 ஆவது வயதில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இரவு 9 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
