கார்முகப் படலம் - 769

bookmark

769.    

‘கலித் தானைக் கடலோடும்
   கைத் தானக் களிற்று அரசர்
ஒலித்து ஆழி என வந்து.
   மணம் மொழிந்தார்க்கு எதிர். “உருத்த
புலித் தானை. களிற்று உரிவைப்
   போர்வையான் வரி சிலையை
வலித்தானே மங்கை திரு
   மணத்தான்” என்று. யாம் வலித்தோம்.
 
கை  - துதிக்கையும்; தானம் - மதநீரும் உடைய; களிறு அரசர் -
யானைப்படை  கொண்ட  மன்னர்;  கலித்  தானைக்  கடலோடும் -
ஆரவாரமுடைய சேனையாகிய கடலோடு; ஆழி என ஒலித்து வந்து -
கடல்போல      முழக்கம்      செய்து     வந்து;  மணம் மொழிந்
தார்க்கு    - மணத்தைக்  குறித்து மகள் பேச அவர்களுக்கு; எதிர் -
(எல்லாம்)  எதிர்மொழியாக;  உருத்த  புலித்தானை - சினம் கொண்ட
புலித்தோலை ஆடையாகவும்;  களிறு  உரிவைப்  போர்வையான் -
யானைத்  தோலைப்  போர்வையாகவும் கொண்டுள்ளவனாகிய   சிவன்;
வரிசிலையை  - போரில் எடுத்த கட்டமைந்த வில்லை; வலித்தானே-
தன்  வலிமை  கொண்டு  வளைத்தவனே;  மங்கை திருமணத்தான் -
இந்தச்  சீதையின் மணமகனாவதற்கு உரியவன்; என்று  யாம் - என்று
நாங்கள்; வலித்தேம் - உறுதியாகத் தெரிவித்தோம்.

முதல் வலித்தல்:  வளைத்தல்.  இறுதியில்  வரும்  வலித்தல்: உறுதி
கூறல்.                                                    20