கார்முகப் படலம் - 766

bookmark

766.    

‘உழுகின்ற கொழு முகத்தின்.
   உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற. புவி மடந்தை
   திரு வெளிப்பட்டென. புணரி
எழுகின்ற தெள் அமுதோடு
   எழுந்தவளும். இழிந்து ஒதுங்கித்
தொழுகின்ற நல் நலத்துப்
   பெண் அரசி தோன்றினாள்.
 
உழுகின்ற     - (அவ்வாறு)   உழுது வந்த;  கொழு முகத்தின் -
கொழுவின்   முனையில்;  உதிக்கின்ற  கதிரின்  ஒளி  -  உதிக்கும்
கதிரவனின் ஒளியை;  பொழிகின்ற - வீசுகின்ற; புவி மடந்தை திரு -
பூமி  தேவியின்  திருவுருவம்;   வெளிப்பட்டென  -  வெளிப்பட்டாற்
போல; புணரி எழுகின்ற- பாற்கடலில் தோன்றிய; தெள்  அமுதோடு-
தெள்ளிய   அமுதுடன்;    எழுந்தவளும் - பிறந்த     இலக்குமியும்;
இழிந்து     - (தன்னழகு)   தாழ்ந்து;   ஒதுங்கி - ஒதுங்கி    நின்று;
தொழுகின்ற  -  (கை  கூப்பி)  வணங்குகின்ற;  நன்னலத்து  - மிக்க
பேரழகு   படைத்த;   பெண்   அரசி   -பெண்களின்  தலைவியான;
தோன்றினாள் - இவள் (இந்தச் சீதை) தோன்றினாள். 

சீதை   கொழுமுகத்தில் தோன்றினாள் என்றார். சீதையின் திருமேனி
பொன்னிறமாதலால்    ‘உதிக்கின்ற    கதிரின்     ஒளி   பொழிகின்ற
புவிமடந்தை’  என்றார்  -  தன்மைத்  தற்குறிப்பேற்ற    அணி. சீதா -
உழுபடை   சால்.   இலக்குமியும்  தாழ்ந்து    வணங்கத்தக்க  பேரழகு
படைத்தவள் சீதை என்பது.                                  17