கார்முகப் படலம் - 767

bookmark

767.    

‘குணங்களை என் கூறுவது?
   கொம்பினைச் சேர்ந்து. அவை உய்யப்
பிணங்குவன; அழகு. இவளைத்
   தவம் செய்து பெற்றதுகாண்;
கணங் குழையாள் எழுந்ததற்பின்.
   கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழியப் பொலிவு இழந்த
   ஆறு ஒத்தார். வேறு உற்றார்.
 
குணங்களை     - (இந்தப் பெண்ணின்) குணங்களைப் பற்றி;  என்
கூறுவது  -  என்னவென்று  நான்  சொல்வது?  (என்னால்    சொல்ல
முடியாது);   அவை   -   (ஏனெனில்)  அந்தக்  குணங்கள்   யாவும்;
கொம்பினை  -  பூங்கொம்பு  போன்ற மெல்லிய சீதையை; சேர்ந்து -
அடைந்து;  உய்ய  -  நல்வாழ்வு  பெறும்பொருட்டு;  பிணங்குவன -
(நீயோ   நானோ   முற்பட்டுச்   சேர்வது  என  மாறுபட்டு)   கலகம்
புரிகின்றன; அழகு - (இது மட்டுமா?) அழகு என்பதோ; தவம் செய்து
-  தவத்தைச்  செய்து;  இவளைப்  பெற்றது  - இவளை அடைந்தது;
கணம்  குழையாள்  -  திரண்ட  குழையென்னும்  காதணி  அணிந்த
இந்தச்  சீதை;  தோன்றியபின்  -  (பூமியிலிருந்து)  வெளிப்பட்டபின்;
வேறு  உள்ளார்  -  மற்றை  மங்கையர்  யாவரும்;  கங்கை  எனும்
அணங்கு  -  கங்கை  என்று சொல்லப்படுகின்ற தெய்வப்பெண்; கதிர்
வானின்  இழிய  -  கதிரவன்  இயங்கும்  வானத்திலிருந்து   (இந்தப்
பூமிக்கு)  இறங்கி வந்ததனால்; பொலிவு இழந்த ஆறு - தமது அழகை
இழந்த  மற்றை  நதிகளை;  ஒத்தார்  -  போன்று  தமது  பொலிவை
இழந்தார்கள்.

குணங்கள்     யாவும் இச் சீதையைச் சேர்தலால் சிறப்புப் பெற்றன.
அவை     இவளிடம்       செயற்கையாகவன்றி     இயற்கையாகவே
அமைந்துள்ளன. அழகு இவளைத் தவம் செய்து   பெற்றது.  ஏனெனில்.
உலகத்தில் மங்கையர்தான் அழகைத் தவஞ் செய்து   பெறுவர். இங்குக்
குணமும் அழகும் ஓரிடத்து இயைந்து  நிற்கும்  அருமை தோன்றுகிறது.
சீதை   உத்தம    அழகு.    குணங்களுடன்   தெய்வத்   தன்மையும்
வாய்ந்தவள் என்பதை விளக்குகின்றார் இப்பாடலில்.              18