கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் - 3
"தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும் " என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல். தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம். ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நின்றார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது, ஒரு வெள்ளி கூஜா. இறைவனுக்கு ஒரு கூறி, அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றாராம்.
நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது. சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர் இன்றும் எல்லோர் மனதிலும் வாழ்கிறார்.
