எழுச்சிப் படலம் - 878

bookmark

தசரதனுடைய நேய மங்கையர் செல்லுதல்

தயரதன் நேய மாதரும் அரசியரும் போதல்
 
878.    

நிறை மதித் தோற்றம் கண்ட
   நீல் நெடுங் கடலிற்று ஆகி.
அறை பறை துவைப்ப. தேரும்.
   ஆனையும். ஆடல் மாவும்.
கறை கெழு வேல் கணாரும்.
   மைந்தரும். கவினி. ஒல்லை
நெறியிடைப் படர. வேந்தன்
   நேய மங்கையர்தாம் செல்வார்.*
 
நிறைமதி    - கலைகள் நிரம்பிய சந்திரனின்; தோற்றம் கண்ட -
எழுச்சியைக்  கண்ட; நீல்நெடுங் கடலிற்று  ஆகி  -  நீல  நிறமான
கடலின்     தன்மையுடையதாகி;    அறைபறை     துவைப்ப    -
அடிக்கப்படுகின்ற   வாத்தியங்கள்  முழங்க;  ஆனையும்  தேரும்  -
யானையும்   தேர்களும்;   ஆடல்   மாவும்   -   வெற்றி  வாய்ந்த
குதிரைகளும்;  கறை   கெழு   வேல்   -   குருதிக்  கறை  படிந்த
வேல்போன்ற;  கணாரும் - கண்களையுடைய மகளிரும்; மைந்தரும் -
காளையரும்;   கவினி  -  அழகாகக்  கூடி;  ஒல்லை  -  விரைவாக;
நெறியிடைப் படர - வழியிலே செல்லவும்; வேந்தன் நேய மங்கையர்
- தசரதனின் அன்புக் குரிய பெண்கள்; எழுந்தார் - புறப்பட்டார்கள்.

நிறைமதி     தோன்றக்  கடல்    பொங்கியொலிக்கும்.  ஆதலால்.
ஆரவாரிக்கின்ற  சேனைகளுக்கு   ஒப்புக் கூறப் பெற்றது. நிறைமதியின்
தோற்றம்   கண்ட  கடல்போல  வாத்தியங்கள்   முழங்க  நால்வகைப்
படையும்.   மகளிரும்.  மைந்தரும்  முன்னே  செல்லத்     தசரதனின்
உரிமை மனைவியர் பின்னே சென்றனர் என்பது.                 62