எழுச்சிப் படலம் - 879

bookmark

கைகேசி செல்லுதல்

879.    

பொய்கை அம் கமலக் கானில்
   பொலிவது ஓர் அன்னம் என்ன
கைகயர் வேந்தன் பாவை.
   கணிகையர் ஈட்டம் பொங்கி
ஐ-இருநூறு சூழ்ந்த.
   ஆய் மணிச் சிவிகைதன்மேல்.
தெய்வ மங்கையரும். நாண.
   தேன் இசை முரல. போனாள்.
 
பொய்கை - தடாகத்தின்; அம் கமலக் கானில்- (மலர்ந்த) அழகிய
தாமரைக் காட்டிலே;பொலிவது - விளங்குகின்ற; ஓர் அன்னம் என்ன
-  அன்னப் பறவை  போல;  கைகயர்  வேந்தன்  பாவை  - கேகய
அரசனின்   மகளாகிய   கைகேயி;  கணிகையர்  ஈட்டம்  -  பணிப்
பெண்களின்  கூட்டம்;  பொங்கி  ஐ  இரு நூறு சூழ - எழுச்சியோடு
ஆயிரவர் தன்னைச்  சூழ்ந்து  வர;  தெய்வ  மங்கையரும்  நாண -
தெய்வப்  பெண்களும் (தன் சிறப்பைக் கண்டு)   வெட்கம் அடையவும்;
தேன்  இசை  முரல - வண்டுகள் இசையோடு பாடவும்; ஆய்மணி -
ஆராய்ந்து  பதிக்கப்பட்ட  மணிகளால்  செய்யப்  பெற்ற; சிவிகைதன்
மேல் - பல்லக்கிலே; போனாள் - சென்றாள்.

கணிகையர்   சூழச்  செல்லும்  கைகேயிக்குக்  கமலத்  தடாகத்தில்
பொலியும் அன்னம் உவமையாயிற்று.                          63