எழுச்சிப் படலம் - 871
இரவும் பகலும் ஒருசேர உளவாயின எனல்
குடை கொடிகளின் நெருக்கம்
871.
குடையொடு பிச்சம். தொங்கல்
குழாங்களும். கொடியின் காடும்.
இடை இடை மயங்கி. எங்கும்
வெளி கரந்து இருளைச் செய்ய.
படைகளும். முடியும். பூணும்.
படர் வெயில் பரப்பிச் செல்ல-
இடை ஒரு கணத்தினுள்ளே.
இரவு உண்டு; பகலும் உண்டே!
குடையொடு - குடைகளும்; பிச்சம் - பீலிக்குஞ்சக் குடைகளும்;
தொங்கல் குழாங்களும்- மாலைக் கூட்டங்களும்; கொடியின் காடும்-
கொடிகளின் தொகுதிகளும்; இடை இடை மயங்கி - தம்முள் கலந்து;
எங்கும் வெளிக் கரந்து- எல்லா இடத்திலும் வெற்றிடம் இல்லாதவாறு
மறைத்து; இருளைச் செய்ய - இருளை உண்டாக்க; படைகளும் -
(வில்முதலான) படைக்கருவிகளும்; முடியும் பூணும் - பொன்
மகுடமும் அணிகளும்; படர்வெயில் - பரவிய ஒளியை; பரப்பிச்
செல்ல - பரப்பிக் கொண்டு போக; இடை - (அச்சேனை செல்லும்)
இடத்தில்;ஒரு கணத்தினுள் - ஒரே கணப்பொழுதிலே; இரவு உண்டு-
இரவும் உள்ளது; பகலும் உண்டு - பகலும் உண்டு.
குடைகள் வெயிலை மறைக்கின்றன;யானையின் மேனி கருமையாக
உள்ளது; மாலை. கொடி முதலியன விண்ணை மறைத்து நிற்கின்றன.
ஆகவே. இவற்றால் எங்கும் இருள் பரவியுள்ளது. ஆனால்.
படைக்கலம் முதலியன வெயிலை உண்டாக்குகின்றன. அதனால். கண
நேரத்தில் இரவும் பகலும் ஒருசேர உள்ளன என்பது. 55
