எழுச்சிப் படலம் - 865

bookmark

சுண்ணமும் தூசியும் நிறைதல்

தூளி எழுந்து நிறைய யாவரும் செல்லுதல்
 
865.    

எண்ண மாத்திரமும் அரிதாம் இடை.
வண்ண மாத் துவர் வாய். கனி வாய்ச்சியர்.
திண்ணம் மாத்து ஒளிர் செவ் இளநீர். இழி
சுண்ணம் ஆத்தன; தூளியும் ஆத்தவே.
 
எண்ணம்   மாத்திரமும் - நினைக்கவும் கூட;  அரிது   ஆம் -
அரிதாகிய;  இடை - இடையையும்; வண்ண மாத் துவர்வாய் - சிறந்த
பவளம்  போன்ற  அழகிய வாயையும்; கனி வாய்ச்சியர்  - கனிகளின்
சுவை   போன்ற   இனிமையான    சொற்களையுடைய    மாதர்களின்;
திண்ணம்  ஆத்து -  (வாரால்)  உறுதியாகக்  கட்டப்பெற்று; ஒளிர் -
விளங்குகின்ற;    செவ்   இளநீர்   -   செவ்வு   இளநீர்  போன்ற
தனங்களிலிருந்து;  இழி  சுண்ணம் - உதிர்ந்த நறுமணப்  பொடிகளும்;
ஆத்தன   -   எங்கும்   நிறைந்தன;   தூளியும்   -   (சேனையால்
எழுப்பப்பட்ட) தூசியும் நிறைந்தன.

பெண்களின்    நறுமணப் பொடியும் சேனைகள் எழுப்பிய புழுதியும்
எங்கும்  நிறைந்தன  என்பது.  சுண்ணம்.  தூளி இரண்டும்   ஆத்தன
என்ற ஒரு பொதுத் தன்மையைத் தனித்தனி பெற்று வந்தது -   தொடர்
முழுது உவமையணி. ஆத்து- யாத்து என்பதன் மரூஉ.             49