எழுச்சிப் படலம் - 841

bookmark

ஒரு காதலியின் கடைக்கண்நோக்கச் சிறப்பு

841.    

பாண்டிலின் வைத்த ஓர் பாவைதன்னொடும்
ஈண்டிய அன்பினோடு ஏகுவான். இடைக்
காண்டலும். நோக்கிய கடைக்கண் அஞ்சனம்.
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே!
 
பாண்டிலின் வைத்த- வண்டியில் ஏற்றப்பட்ட; ஓர்  பாவை - ஒரு
பெண்; ஈண்டிய அன்பினோடு - நெருக்கமான அன்பு கொண்டவனாகி;
தன்னொடும்  ஏகுவான்  -  தன்னோடு ஓடி வருகின்ற இளையவனை;
இடை காண்டலும் - இடை வழியிலே தன் பார்வையைச்  செலுத்தவும்;
நோக்கிய    -   (அவனை)   பார்த்த;   கடைக்கண்   -   அந்தக்
கடைக்கண்ணினது;  அஞ்சனம் - மையானது; ஆண் தகைக்கு - (அப்
பெண்ணால்   பார்க்கப்   பெற்ற)  அந்த  ஆடவனுக்கு;  இனியது  -
இனிமையான; ஓர் அமுதம் - சிறந்த அமுதம்; ஆயது - ஆயிற்று.

ஓர்    ஆண்மகன்   ஒருத்தியை     வண்டியில்       ஏற்றிவிட்டு
அதன்பின்னாலே   ஓடிவருகிறான்;   அவன்    மேல்   அவள்   தன்
கடைக்கண்    பார்வையைச்    செலுத்துகின்றாள்;    அவன்     அப்
பார்வையைக்   கண்டது  அவனுக்கு  அமுதத்தை    உண்டதுபோன்று
இருந்தது என்றார்.                                         25