எழுச்சிப் படலம் - 842

bookmark

பிரிந்த காதலன் பேதுறுதல்

ஓர் ஆடவன் நிலை
 
842.    

பிள்ளை மான் நோக்கியைப் பிரிந்து போகின்றான்.
அள்ளல் நீர் மருத வைப்புஅதனில். அன்னம்ஆம்
புள்ளும் மென் தாமரைப் பூவும் நோக்கினான்.
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான்.
 
பிள்ளை  மான் நோக்கியை- இளைய மான் போன்ற  கண்களைக்
கொண்ட  காதலியைப்; பிரிந்து  போகின்றான் - பிரிந்து செல்லுகின்ற
ஓர்  ஆடவன்;  அள்ளல்நீர் - சேரும் நீரும் நிறைந்த; மருத வைப்பு
அதனில் - மருத நிலத்தில் (வயல்); அன்னமாம் புள்ளும் -  அன்னப்
பறவையையும்;     மென்தாமரைப்     பூவும்     -     மெல்லிய
தாமரைமலர்களையும்;  நோக்கினான்  -  பார்த்து  (தன்  மனைவியின்
நடையும்.  அடிகளும் நினைவுக்குவர) ; உள்ளமும் தானும் -  மனமும்
தானுமாக;  நின்று  -  தனியாக நின்று; ஊசல் ஆடினான்;- ஊஞ்சல்
போலத் தடுமாறினான்.

தாமரைப்     பூவையும் அன்னத்தையும் ஓர்    ஆடவன் வயலிலே
கண்டதும்  தன்  மனைவியின்  அடிகளும். நடையழகும்    நினைவிற்கு
வந்தன   என்பது.   அவளை  அவன்  பிரிந்தமையால்    அவற்றைக்
காணமுடியவில்லையே என்று வருந்தினான்.                      26