எழுச்சிப் படலம் - 840
வண்டிகள் செல்லுதல்
வண்டியில் வயங்கிய மகளிர்
840.
கண்டவர் மனங்கள் கைகோப்பக் காதலின்.
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால்.
பண் திகழ் பண்டிகள் பரிசின் செல்வன.
புண்டரிகத் தடம் போவ போன்றவே.
கண்டவர் மனங்கள்- (தம்மைப்) பார்த்த ஆடவரின் மனம்;
காதலின் கைகோப்ப - காதலால் கலக்க; பண்திகழ் பரிசின் - பூட்டு
விளங்குகின்ற தன்மையோடு; செல்வன - செல்லுகின்ற; பண்டிகள் -
வண்டிகள்; வண்டு இமிர் கோதையர் - வண்டுகள் ஒலிக்கின்ற
கூந்தலையுடைய மகளிரின்; வதன ராசியால் - முகங்களது
கூட்டத்தால்; புண்டரீகம் தடம் போவ - தாமரை மலர்ந்த தடாகங்கள்
செல்வதை; போன்ற - ஒத்தன.
வண்டியில் செல்லும் மகளிரின் முகங்கள் பூத்த தாமரைகள் போல்
விளங்கின. அதனால் வண்டி செல்வது தாமரைத் தடாகமே போவது
போன்றது என்றார். தற்குறிப்பேற்ற அணி. 24
