எழுச்சிப் படலம் - 835
யானைப்படையின் மிகுதி
யானை குதிரைகளின் செலவு
835.
மொய் திரைக் கடல் என முழங்கு மூக்குடைக்
கைகளின். திசை நிலைக் களிற்றை ஆய்வன. -
மையல் உற்று. இழி மத மழை அறாமையால்.
தொய்யலைக் கடந்தில. சூழி யானையே.
சூழியானை - முகபடாத்தை அணிந்த யானைகள்; இழி மதமழை-
ஒழுகுகின்ற மதப்பெருக்கு; அருமையால் - எப்பொழுதும் நீங்காததால்;
தொய்யலை - (மதநீரால் தோன்றிய) சேற்றை; கடந்தில - கடந்து
கரையேற மாட்டாது; மையல் உற்று - மயக்கமுற்று; மொய்திரைக்
கடலென - நெருங்கிய அலைகளையுடைய கடல்போல; முழங்கும்
மூக்குஉடை - முழங்கும் மூக்கோடு கூடிய; கைகளின் - (தம்)
கைகளினாலே; திசை நிலைக் களிற்றை - எட்டுத்திக்கு யானைகளை;
ஆய்வன - துழாவி ஆராய்கின்றன.
(வி.ரை) யானைகள் சேற்றில் விழுந்து கரையேற மாட்டாமல் கடல்
போல ஒலித்துக் கைகளால் திசையானைகளைத் துழாவித் தேடின
என்பது. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. தொய்யல் - சேறு நிரம்பிய
பள்ளம். 19
