எழுச்சிப் படலம் - 833
மகளிரைத் தழுவி மைந்தர் செல்லுதல்
833.
வில்லினர்; வாளினர்; வெறித்த குஞ்சியர்;
கல்லினைப் பழித்து உயர் கனகத் தோளினர்;
வல்லியின் மருங்கினர் மருங்கு. மாப் பிடி
புல்லிய களிறு என. மைந்தர் போயினார்.
வெறித்த குஞ்சியர் - (மலர்மாலை முதலியவற்றால்) மணம்
பொருந்திய தலைமயிரினையுடையவரும்; கல்லினைப் பழித்து -
மலையைத் தமன்கு ஒப்பாகாது என இகழ்ந்து; உயர் கனகத்
தோளினர் - மேம்பட்ட பொன்னணிகளைப் பூண்ட
தோள்களையுடையவருமாகிய; மைந்தர் - ஆடவர்; வில்லினர் -
வில்லை ஏந்தியவரும்; வாளினர் - வாளினை ஏந்தியவருமாகி; மாப்
பிடி புல்லிய - பெருமை மிக்க பெண் யானையைத் தழுவிய; களிறென
-ஆண்யானையைப் போல; வல்லியின் மருங்கினர் - கொடிபோன்ற
இடையை யுடையவர்களாகிய தத்தம் மனைவியரின்; மருங்கு
போயினார் - பக்கத்தில் சென்றனர்.
மகளிரின் படைக்குப் பாதுகாவலாக அவர்களை யடுத்து வில்லும்
வாளும் ஏந்திய மைந்தர் சென்றார் என்பது கருத்து.
மகளிரின் பக்கத்தே செல்லும் ஆடவர்க்குப் பெண்யானையைப்
புல்லிய களிறு உவமையாயிற்று. வில்லினர் வாளினர் -
முற்றெச்சங்கள் 17
