உண்டாட்டுப் படலம் - 1092

bookmark

நங்கை ஒருத்தி நாணத்தால் தூதனுப்ப இயலாது விம்முதல்

1092.

மெல்லியல் ஒருத்தி. தான் விரும்பும் சேடியை
புல்லிய கையினள். ‘போதி தூது’ எனச்
சொல்லுவான் உறும்; உற. நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது எலாம் இருந்து. விம்மினாள்.
 
மெல்லியல்     ஒருத்தி - மென்மைத் தன்மைபொருந்திய ஒருத்தி;
தான்  விரும்பும்  சேடியை  - தன் விருப்பத்திற்குரிய ஒருதோழியை;
புல்லிய  கையினள்  - தழுவிய கையினையுடையவளாய்; போதி தூது
எனச்   சொல்லுவான்  உறும்  -  (எனக்காகக்  கணவனிடம்)  தூது
போவாயாக  எனச்  சொல்ல வருவாள்;  உற. நாணும்; சொல்லலள் -
அப்படிச்  சொல்லவருமிடத்து   நாணம்   வந்து   தடுக்கும்;  அதனாற்
சொல்லமாட்டாள்;எல்லை இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள்
-  (இவ்வாறு  அவள்  காதலால்   சொல்ல  நினைப்பதும். நாணத்தால்
சொல்லாமல்  விடுவதுமாக)  அளவில்லாத  காலம்  முழுவதும்  (வீணே
கழித்து வெறிதே) இருந்து புலம்பினாள்.

“இராப்பொழுது   முழுதும் இருந்து விம்மினாள் மெல்லியள் ஒருத்தி”
என்பதனால்  அவள்  ஒருத்தியாக  இருந்து   தூதனுப்ப   எண்ணியும்
நாணத்தால்  இயலாமற்போனதனை   நினைந்து.   அவள்  மெல்லியள்
ஆயிற்றே என் ஆவளோ என்று  கவிஞர்  வருந்தும் வருத்தம் பாட்டில்
கேட்கிறது.                                                46