உண்டாட்டுப் படலம் - 1093

bookmark

ஒருத்தி தலைவன் செயலைச் சாற்ற நாணுதல்

1093.

ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி. தன் உயிர்
மாறு இலாக் காதலன் செயலை. மற்று ஒரு
நாறு பூங் கோதைபால் நவில நாணுவாள்;
வேறு வேறு உற. சில மொழி விளம்பினாள்.
 
ஊறுபேர்     அன்பினாள்  ஒருத்தி  -  மேன்மேற்  சுரக்கின்ற
பேரன்பினையுடையாள்  ஒருமங்கை; தன் உயிர் மாறு இலாக்காதலன்
செயலை  -  தன்னையன்றி   வேறு  உயிர் இல்லாதவன் ஆகிய (தன்)
காதலன்   செய்த   (பிழைச்)    செயல்களை;  மற்று  ஒரு  நாறுபூங்
கோதைபால்   நவில  நாணுவாள் -  மணம்  வீசும்  மலர்மாலைகள்
அணிந்த  வேறொருத்தியினிடம்   கூறுதற்கு.   (அழைத்த பின் கூறாது)
நாணம்  உறுவாள்;  வேறு வேறு உளசில மொழி  விளம்புவாள்  -
(அழைத்தற்கு ஏதாவது பேசவேண்டுமே என்று)  தொடர்பற்ற  பல்வேறு
சொற்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“தான்     எவ்வம்  கூரினும்  நீ செய்த  அருளின்மை. என்னையும்
மறைத்தாள்  என்தோழி;  அது    கேட்டு நின்னையாள் பிறர்முன்னர்ப்
பழிகூறல்   தான்   நாணி”    (கலி:   44.  8-10)   எனும்  சான்றோர்
மொழியினைக்  கற்றவள்  ஆதலின்  மற்றொரு  கோதைபால்  காதலன்
செயலை  நவில  நாணினாள்.  அவளோடு   ஏதாவது  பேசவேண்டுமே
என்று  ஒன்றுக்கொன்று  தொடர்பில்லாத   வேறு  வேறு  சொற்களைப்
பேசிக்கொண்டிருந்தாள்   என்றவாறு    “எள்ளின்   இளிவாம்  என்று
எண்ணி  அவர்திறம்  உள்ளும்  உயிர்க்காதல்  நெஞ்சு”  (திருக். 1298)
எனும் வள்ளுவக் காதலி போன்றாள் இவள் என்க.                47