உண்டாட்டுப் படலம் - 1087

bookmark

மாலையாற் கட்டுண்ட தோளின் மாண்பு

1087.    

ஏலும் இவ் வன்மையை என் என்று உன்னுதும்-
ஆலை மென் கரும்பு அனான் ஒருவற்கு. ஆங்கு. ஒரு
சோலை மென் குயில் அனாள் சுற்றி வீக்கிய
மாலையை நிமிர்ந்தில. வயிரத் தோள்களே?
 
ஆலைமென் கரும்பு அனான் ஒருவற்கு - ஆலையில் அரைபட்ட
மெல்லிய  கரும்பு  போலப்  (பிரிவுத் துயரால்) வருந்திய ஒரு வீரனுக்கு;
ஆங்கு  ஒரு  சோலைமென் குயில்  அனாள்  - அங்கு. சேலையில்
உள்ள  மெல்லிய  குயில்  போன்ற   குரல்  உடையாள் ஒருத்தி; சுற்றி
வீக்கிய  மாலையை  - (அவனைச்)  சுற்றிக் கட்டிய (மலர்) மாலையை;
வயிரத் தோள்கள் நிமிர்ந்தில - அவ்வீரனுடைய   வயிரம்   போன்ற
வலிய     தோள்கள்  மீறி    நிமிர்ந்தெழ    இயலவில்லை;   ஏலும்
இவ்வன்மையை  என்  என்று  உன்னுதும்? - அவனைக் கட்டியுள்ள
இம் மாலையில் அமைந்துள்ள வலிமையை என்னென்று கருதுவோம்?

காதலின்     வலிமையை    மாலையின்   மேலிட்டுக்  கூறியவாறு.
வயிரதத்தோள்கள்  அவனுடையவை  - ஆனால்.  மாலையை  அறுக்க
மாட்டாத  வயிரத்தோள்கள்  என  வியந்தார்.   மாலையால்  காதலரை
மங்கையர்  கட்டுதல்:  “எல்லியம்போது   இனிதிருத்தல்   இருந்ததோர்
இடவகையில்.  மல்லிகைமா   மாலை   கொண்டு  அங்கு ஆர்த்தமோர்
அடையாளம்”  (பெரியாழ்.  திரு.  3:  10  :2) ;  “கங்குல்  பால் புகுந்த
கள்வன்   இவன்  எனக்  கதுப்பில்  தாழ்ந்த   தொங்கலால்   முன்கை
யாத்து” (சீவக. 1988) என வருதல் காண்க.                      41