உண்டாட்டுப் படலம் - 1088
ஒருத்தி தூதனுப்ப பாங்கியைக் குறிப்பால் நோக்குதல்
1088.
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்.
மாரனை நோக்கி. ஓர் மாதை நோக்கினாள்;
காரிகை இவள். அவள் கருத்தை நோக்கி. ஓர்
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள்.
சோர் குழல் ஒருத்தி - தாழ்ந்த கூந்தலையுடையாள் ஒருத்தி; தன்
வருத்தம் சொல்லுவான் - தனது வருத்தத்தைச் சொல்லும் பொருட்டு;
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் - சித்திர கூடத்திலிருந்து
மன்மதனின் ஓவியத்தைப் பார்த்து. தன் தோழியை நோக்கினாள்;
காரிகை இவள். அவள் கருத்தை நோக்கி - அத்தோழி. தான்
மன்மதன் கணையால் வருந்தும் எனும் கருத்தை. (குறிப்பால்) அவள்
உணர்த்துகிறாள் என்பதை தன் (குறிப்பால் அறிந்து); ஓர்வேரியந்
தெரியலான் வீடுநோக்கினாள் - தேனுடைய மாலையை யணிந்த
அவள் கணவன் இருக்கும் மனையை நோக்கி நடக்கலுற்றாள்.
“தாம் உறு காமத்தன்மை தாங்களே உரைப்பது என்பது அருங்குல
மகளிர்க்கு ஆகாது” (கம்ப. 2776) ஆதலின். குறிப்பால்
உணர்த்தியவாறு. சொல்லுவான் - வினையெச்சம். காரணப்பொருட்டு.
மன்மதனை நோக்கியது; அவனால் படும் வருத்தம் உரைக்க. மாதை
நோக்கியது: அவ்வருத்தம் உன்னால் தான் களையப்படவேண்டும்
என்பது குறிக்க.... தோழி. இவள் வருத்தம் போக்க. அவன்
வரவேண்டும் எனும் குறிப்புணர்ந்து கணவன் இருக்குமிடம்
நோக்கினாள். “குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது
கொடுத்தும் கொளல்” (திருக். 703). 42
