உண்டாட்டுப் படலம் - 1086

bookmark

கணவன் இருப்பிடம் தேடிச் செல்லும் காரிகையின் இயல்பு

1086.

பயிர் உறு கிண்கிணி. பரந்த மேகலை.
வயிர வான் பூண் அணி. வாங்கி நீக்கினாள்;
உயிர் உறு தலைவன்பால் போக உன்னினாள்;
செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள்.
 
(ஒருத்தி)   உயிர்உறு தலைவன்பால் போக உன்னினாள் - (ஒரு
மங்கை)  தன்   உயிர்  அனைய  கணவனிடம்  பிரிவுத்துயர் தாங்காது
உடனே  போக  நினைத்தாள்; பயிர்உறு கிண்கிணி. பரந்த மேகலை.
வயிர வான்பூண் அணிவாங்கி  நீக்கினாள்  - (பிறர் அறியச் செய்து
விடும்   இவையென்று)    ஒலிமிகுகின்ற   கிண்கிணிகளையும்.  பரவிய
மேகலையையும்.   உயர்ந்த   வயிரமணி    அணிகளையும்    கழற்றிப்
போக்கினாள்;  செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள் - பிரிவில்
தன்  ஒளியால்  வருத்திய  பகைத்திங்கள்  (இப்போதும்)   எல்லோரும்
அறிய  வெளிச்சம்  தருவது கண்டு (அதனைக்) கண்களில்  கனல்  எழ
நோக்கினாள்.

பிறர்     காணாமற் செல்ல  அணிகளைக் கழற்றி எறிந்தமை போல்.
வானத்துத்  திங்களை  ஒன்றும்   செய்ய இயலாமை  பற்றிக் கனல் எழ
நோக்கினாள்  என்க.  இரகசியமாகச்   செய்யும்   பணிகட்கு  ஒலிக்கும்
இயல்புடையார்   ஆகார்.   ஆதலின்.   “தலைவன்    பால்    போக
உன்னினாள்.....பூண்   அணி  வாங்கி  நீக்கினாள்”   என்றார்.   “கலன்
கழித்து   அகல  நீத்தார்.   அறைபறையனைய   நீரார்   அருமறைக்கு
ஆவரோதான்?” (கம்ப. 1017) என்பார் பின்னும்.                  40