உண்டாட்டுப் படலம் - 1072

bookmark

தோழியரைத் தூதனுப்பியவள் தானே காதலனிடம்
தனித்துச் சேர்தல்

1072.

மான் அமர் நோக்கி. ஓர் மதுகை வேந்தன்பால்.
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்.
போனவர் போனவர் தொடரப் போக்கினாள்;
தானும். அங்கு. அவர்கள்பின் தமியள் ஏகினாள்.
 
மான்     அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்பால் - மான்கள்
விரும்பும்  கண்ணுடையாள்  ஒருத்தி.  ஒப்பற்ற  வலிமை வாய்ந்த (தன்)
கணவனிடத்தில்;  ஆனதன்  பாங்கியர் ஆயினார் எலாம் - (தனக்கு)
விருப்பமான  தோழியர்  ஆனவரையெல்லாம்;  போனவர்  போனவர்
தொடரப்     போக்கினாள்  -   (பின்னே)  சென்றவர்கள் (முன்னே)
சென்றவர்களைத்   தொடருமாறு  தொடர்ந்து   அனுப்பிய   வண்ணம்
இருந்தாள்; தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் - (இனி
அனுப்பத்  தோழியர்  இல்லை யாதலால்)  தன்னைத்  தானே தூதாக்கி.
கணவன்   இருக்குமிடம்   நோக்கி    (இவளும்)   அவர்கள்  பின்னே
தனியாளாய்ப் புறப்பட்டாள்!

மதுவுண்டவுடன்    எழுந்த காம வேட்கையால். கணவனிடம் சென்று
சேரும்  கால  இடை வெளி  தராமலேயே  தூதனுப்பித் தூதனுப்பி இனி
அனுப்ப   யாரும்   இல்லை   யாதலால்   தானும்  தூதானாள்  எனத்
தலைவியின்  ஆரா  அன்பும்  தீரா  வேட்கையும் அறிவித்தவாறு. கால
இடை வெளியின்றி அடுக்கடுக்காகத்  தோழியரை  அனுப்பிக் கொண்டே
இருந்தாள் என்பதனை. “போனவர் போனவர்  தொடரப்  போக்கினாள்”
எனும்  அடுக்கால்  உணர்த்திய  திறம் காண்க.  மிக  வேட்கை உயர்வு
பாராது  ஆதலால்.  தான்  தலைவி நிலையிலிருந்தும்  தாழ்ந்து  தானும்
தூதியானாள்  என்பார்.  “தானும்  அங்கு  அவர்கள்   பின்   தமியள்
ஆயினாள்” என்றார்.                                        26