உண்டாட்டுப் படலம் - 1065
ஒருத்தி மலரின் நாளத்தால் மதுப் பருகுதல்
1065.
வான்தனைப் பிரிதல் ஆற்றா
வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட
இரவலர் என்ன ஆர்ப்ப.
தேன் தரு கமலச் செவ் வாய்
திறந்தனள் நுகர நாணி.
ஊன்றிய கழுநீர் நாளத்
தாளினால். ஒருத்தி. உண்டாள்.
வச்சை மாக்கள் ஏன்ற மாநிதியம் - உலோபிகளிடம் பொருந்திய
பெருஞ் செல்வத்தை; வேட்ட இரவலர் என்ன - (பெறுவதற்காக)
விரும்பி வந்துள்ள யாசகர்கள்போல்; பிரிதல் ஆற்றா வான்தனை
வண்டு - பிரிய மாட்டாமல் வான் அளவும் மொய்த்துக் கொண்டுள்ள
வண்டுகளின் கூட்டம்; ஒருத்தி தேன்தரு கமலச் செவ்வாய் - (கண்ட)
ஒருத்தி. தேன் சொரிகின்ற தாமரைப் பூப் போன்ற தன் சிவந்த
வாயை; திறந்தனள் நுகரநாணி - திறந்தால். வண்டுகள் உட்சென்று
விடுமென்று நாணமுற்று; ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால்
உண்டாள் - கிண்ணத்தில் ஊன்றி வைத்த செங்கழுநீரின்
(உள்துளை கொண்ட) தண்டினால் (மதுவை உறிஞ்சி) உண்டாள்.
வண்டுகளையும் உட்கொள்ள நேரும் அபாயம் உள்ளது மது
வுண்ணும் பழக்கம் என்று அதன் இழிவு சுட்டியவாறு. “நெளிந்து
உறை புழுவை நீக்கி. நறவு உண்டு நேர்கின்றேன்”. (கம்ப 4359) என்று
சுக்கிரீவன் வாயாலும் மதுவுண்ணும் சூழலை உரைப்பார். இன்று
குளிர்பானங்கள். பல்லில் படாமல் உறிஞ்சு குழலால் பருகும் முறை.
அன்றே இருந்ததை இதனால் அறிக. 19
