உண்டாட்டுப் படலம் - 1066

bookmark

ஒருத்தி கள்ளைக் கணவன் உண்ணான் எனக்
கருதித் தானும் உண்ணாமை

1066.

புள் உறை கமல வாவிப்
   பொரு கயல் வெருவி ஓட.
வள் உறை கழித்த வாள்போல்
   வசி உற வயங்கு கண்ணாள்.
கள் உறை மலர் மென் கூந்தல்
   களி இள மஞ்ஞை அன்னாள்.
‘உள் உறை அன்பன் உண்ணான்’
   என் உன்னி. நறவை உண்ணாள்.
 
புளஉறை     கமல வாவிப்  பொருகயல் வெருவி ஓட - (நீர்ப்)
பறவைகள்  வாழ்கின்ற  தாமரைத்   தடாகங்களில்   ஒன்றை  யொன்று
மோதுகின்ற   கயல்  மீன்கள்.  (இவற்றிற்கு)   ஒப்பாக   இயலாதென்று
அஞ்சி  ஓடுமாது;  வள் உறை கழித்த வாள்போல் வசி உற வயங்கு
கண்ணாள்  -  தோல்   உறையிலிருந்து  உருவியெடுத்து வாள்போன்ற
கூர்மை  மிக  மிளிர்கின்ற   கண்களையுடையவளும்;  கள்உறை மலர்
மென்   கூந்தல்  களி  இள மஞ்ஞை அன்னாள்  -  தேன்தங்கும்
மலர்களை  யணிந்த  மெல்லிய   கூந்தலையுடைய  களித்த இளமயிலை
ஒப்பவளும்  ஆகிய  ஒருத்தி; உள் உறை அன்பன் உண்ணான் என
உன்னி   நறவை  உண்ணாள்  -  (தன்)  உள்ளத்துள்  (எப்போதும்)
உறைகின்ற  (தன்)  காதலன்  (மது)   உண்ணான்  என்ற  காரணத்தால்
(தானும்) மதுவை உண்ணாதவள் ஆயினாள்.

உண்மைக்     காதல்  புலன்  இன்பத்தைத்  துறக்கவும்  ஒருப்படும்
என்பது  உணர்த்தியவாறு.  அவன்  வெளியே   உறைந்து  மறைபவன்
அல்லன்  என்பாள்.  “உள்  உறை  அன்பன்” என்றாள். “நெஞ்சத்தார்
காதலராக  வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு  அறிந்து” (திருக். 1128)
என்பாள்   வள்ளுவக்   காதலியும்.  கணவன்   ஒழுக்கத்திற்கு   ஊறு
செய்யாத வாழ்க்கைத்துணை இவள்.                            20