உண்டாட்டுப் படலம் - 1055

bookmark

கள் காமத்தை மிகுவித்தல்

1055.

தாமமும் நானமும் ததைந்த. தண் அகில்
தூமம். உண். குழலியர் உண்ட தூ நறை.
ஓம வெங் குழி உகு நெய்யின். உள் உறை
காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே.
 
தாமமும் நானமும் ததைந்த தண்ணகில் தூமம் உண்குழலியர் -
மலர்மாலையும்.  புனுகும்  நிறைந்த.   குளிர்ந்த   அகில்புகை  யூட்டப்
பெறும்  கூந்தலையுடைய மகளிர்; உண்ட  தூநறை - உண்ட தூய மது;
வெங்குழி  உகு  ஓம  நெய்யின் - கனல் நிறைந்த யாககுண்டத்திலே
பெய்த  ஓமநெய்யைப் போன்று; உள்நிறை வெங்கனலினைக் கனற்றிக்
காட்டிற்று  -  (அவர்தம்)  உள்ளத்துள்ளே  உறைகின்ற கொடிய காமக்
கனலினை (மேலும்) சூடேற்றச் செய்தது.

நெய்யால் கனல்  அணையாது  மேலும்  மிகுதல்  போல.  மதுவால்
காமம் அடங்காது மேலும் மிகும் என்றுணர்த்தியவாறு.

அவர்கள்    உள்ளக்  குழிக்குள் நீறுபூத்த நெருப்பாய்க் காமக்கனல்.
முன்பே  உறைந்து  கிடந்தது.  அக்   கனலை   நெய்யூற்றி எழுப்புதல்
போல.  மது  ஊற்றிச் சுடர்விடச் செய்தனர் என்பார்.  “உள்நிறை  காம
வெங்கனலினைக் கனற்றி” என்றார். ஓம வேள்விக்கு.  நெய்போல.  காம
வேள்விக்கு  மது  உந்துசக்தி.  குழலுக்கு  அகிற்புகையூட்டலும்.  மாலை
சூட்டலும்.   புனுகு  பூசலும்.   கள்ளால்   மிகுந்த  காமத்தை  மேலும்
கொழுந்திடச் செய்யும் வாயில்களாம்.

“அளிந்து  அகத்து   எரியும்  தீயை  நெய்யினால்  அவிக்கின்றார்”
(கம்ப: 4359) என்பார் பின்னும்.                                9