இராசகோபாலாச்சாரி

இராசகோபாலாச்சாரி

bookmark

வாழ்க்கை வரலாறுஇராஜகோபாலச்சாரி இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர். அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திரக் கட்சியயை தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர். பிறப்பு மற்றும் கல்வி:கிருட்டிணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார். ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். பிரிட்டீஷ் அரசு ஜெர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டீஷ் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசியல் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனைவரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971-ஆகஸ்டு-31ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கைவிடப்படும் என அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தபொழுது, அம்முடிவைக் கைவிடும்படி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டிற்கு 1971-ஜூலை-20ஆம் நாள் மாலை கொட்டும்மழையில் சென்று கருணாநிதியைச் சந்தித்து மதுவிலக்கை கைவிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.