இயேசு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல் - 2 :-
9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் (ஒத்தமை நற்செய்திகள்), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டு சென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின் படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். "இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்"(யோவான் 18:14).
10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" (யோவான் 19:17). இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் (காண்க: லூக்கா 23:26). இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:27-31).
11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் (காண்க: யோவான் 19:17-22). காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு (காண்க: மாற்கு 15:25). அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் "ஏறக்குறைய நண்பகல் வேளை" (யோவான் 19:14). அந்த நண்பகல் வேளையில் தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டு குட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கி நிற்பதைக் காணலாம் (காண்க: யோவான் 1:29 – "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!").
12) இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் (கள்வர்களும்) சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் இயேசுவை இகழ்ந்ததாக லூக்கா தவிர மற்ற மூன்று நற்செய்தியாளரும் கூறுகின்றனர். லூக்கா மட்டும் அந்த, இரு கள்வரில் ஒருவன் இயேசுவின் மீது பரிவு காட்டியதாகக் குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:39-43).
13) சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்கி இயேசு இறந்தார். அவர் சிலுவையில் தொங்கிய போது உரைத்த சொற்களை நற்செய்தியாளர்கள் வெவ்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிசைமுறை கீழ்வருமாறு:
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக்கா 23:34).
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"(லூக்கா 23:43).
"அம்மா, இவரே உம் மகன்"(யோவான் 19:25-27).
"எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" ((அரமேயம்). ("என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?")
"தாகமாய் இருக்கிறது" (யோவான் 19:28).
"எல்லாம் நிறைவேறிற்று"(யோவான் 19:30).
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"(லூக்கா 23:46).
இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறியதாக நற்செய்தி நூல்கள் பதிவு செய்துள்ள மேற்காட்டிய கூற்றுக்களை விரித்துரைத்து அவற்றின் ஆழ்பொருளை எடுத்து விளக்கும் செயல் கிறித்தவ வரலாற்றில் சிறப்பான ஒன்று.
14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படல் பற்றிய நற்செய்தித் தகவல்:-
சிலுவையில் தொங்கிய இயேசு இறந்ததும், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவை அணுகி, இயேசுவின் உடலைக் கேட்டார் என்றும், சிலுவையினின்று இறக்கிய உடலை மெல்லிய துணியால் சுற்றிப் பொதிந்து, அதற்கு முன்பு யாரையும் அடக்கம் செய்திராத ஒரு புதிய கல்லறையில் அந்த உடலை வைத்தார்கள் என்றும் லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 23:50-53). அவ்வாறே மாற்குவும் கூறுகிறார் (காண்க: மாற்கு 15:42-46). அக் கல்லறையை அரிமத்தியா யோசேப்பு தமக்கென வைத்திருந்தார் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத்தேயு 27:60). இயேசுவை அடக்கம் செய்ததில் நிக்கதேம் என்பவரும் பங்கேற்றதை யோவான் குறிப்பிடுகிறார்: "முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்"(யோவான் 19:39).
இயேசு இறந்த நாள் பஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாக இருந்ததாலும் அக்கல்லறை அருகின் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் (காண்க: யோவான் 19:42). கல்லறையின் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனதாக மத்தேயு கூடுதல் தகவல் தருகிறார் (காண்க: மத்தேயு 27:60). இயேசுவின் அடக்கம் ஆழ்ந்த இறையியல் பொருள் கொண்டதாக தூய பவுல் விளக்குவார்.
நற்செய்திகள்படி இயேசு உயிர்பெற்றெழுந்து விண்ணேற்றம் அடைதல்:-
விவிலியத்தின் படி, இயேசு சிலுவையில் அறையுண்ட மூன்றாவது நாள் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார். இச்செய்தியை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்கள் தவிர, தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூட காண்கின்றோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய பகுதிகள் கீழ்வருவன:
மத்தேயு 28:5-10
மாற்கு 16:9
லூக்கா 24:2-16
யோவான் 20:10-17
திருத்தூதர் பணிகள் 2:24 (முதலியன)
