இந்திரா காந்தி - 2

இந்திரா காந்தி - 2

bookmark

1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பெரிதாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்.

எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது.

எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது