இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைகள்
ஒரு சமயத்தில், ராம்நாத் கோயங்கா திருபாய் அம்பானியின் நண்பராக இருந்தார். ராம்நாத் கோயங்கா நஸ்லி வாடியாவுக்கும் நண்பராகக் கருதப்பட்டார். பல சந்தர்ப்பங்களில், இரண்டு போட்டி தரப்புகளுக்கும் இடையில் தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டுவர ராம்நாத் கோயங்கா முயற்சி செய்தார். அம்பானியின் முறைகேடான வணிகப் பழக்கங்களும், அவரது சட்டத்திற்கு புறம்பான செயல்களும் கோயங்காவுக்கு நிறுவனத்தில் சரியான உரிய பங்கினை கிடைக்கச் செய்யாமல் செய்தது தான் கோயங்காவும் அம்பானியும் எதிரிகளாவதற்கு முக்கிய காரணம் எனப்பட்டது. பிற்காலத்தில், ராம்நாத் கோயங்கா நஸ்லி வாடியாவை ஆதரிக்க முடிவு செய்தார். ஒரு சமயத்தில், "நஸ்லி ஒரு ஆங்கிலேயர். அவரால் அம்பானியைக் கையாள முடியாது. நான் ஒரு வணிகன். அவரை எப்படி முடிப்பது என்பது எனக்குத் தெரியும்...." என்று ராம்நாத் கோயங்கா கூறியதாகக் கூறப்படுகிறது.
நாட்கள் செல்லச் செல்ல, அவர் வெளியிட்ட அகலத்தாள் நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அம்பானிக்கு எதிரான தொடர்ச்சியான பல கட்டுரைகளைத் தாங்கி வரத் துவங்கியது. அவற்றில் திருபாய் லாபத்தை அதிகப்படுத்த முறையற்ற வணிக முறைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் புலன்விசாரணைக்கு தனது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊழியர்களை ராம்நாத் கோயங்கா பயன்படுத்தவில்லை. மாறாக தனது நெருங்கிய நண்பர், ஆலோசகர் மற்றும் பட்டய கணக்காளரான எஸ்.குருமூர்த்தியை இந்த பணிக்காக அவர் நியமித்தார். எஸ். குருமூர்த்தி தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊழியர் பட்டியலில் இல்லாத இன்னுமொரு பத்திரிகையாளரான மானெக் தவாரும் செய்திகளை பங்களிக்கத் தொடங்கினார். அம்பானிகளுக்கு எதிரான ஜம்னாதாஸ் மூர்ஜானி என்னும் தொழிலதிபரும் இந்த பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக இருந்தார்.
அம்பானி மற்றும் கோயங்கா இருவருமே சமூகத்தின் பிரிவுகளால் விமர்சிக்கப்படவும் செய்தனர், பாராட்டப்படவும் செய்தனர். தனிநபர் பகைக்காக ஒரு தேசியப் நாளேட்டை பயன்படுத்துவதாக கோயங்காவை மக்கள் விமர்சித்தனர். இதைவிட மோசமான முறையற்ற, சீர்கேடான நடைமுறைகளைப் பின்பற்றிய தொழிலதிபர்கள் நாட்டில் இன்னும் பலர் இருந்தனர். அவர்களை எல்லாம் விட்டு விட்டு அம்பானியை மட்டுமே கோயங்கா இலக்காகக் கொள்வதாக விமர்சகர்கள் நம்பினர். இந்த கட்டுரைகளை தனது வழக்கமான ஊழியர்களின் உதவியின்றியே வெளியிடும் திறன் குறித்து கோயங்காவை விமர்சகர்கள் பாராட்டவும் செய்தனர். இதனிடையில் திருபாய் அம்பானியும் கூடுதலான அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றுக் கொண்டிருந்தார். திருபாயின் வணிக நுட்பத்தையும், அமைப்பினை தனது விருப்பத்திற்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் அவரது திறனையும் பொதுமக்களில் ஒரு பிரிவினர் போற்றத் துவங்கினர்.
திருபாய் அம்பானி முடக்கு நோயால் பாதிக்கப்பட்ட பின் தான் இந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்தது. திருபாய் அம்பானி சான் டியகோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது பிள்ளைகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் வணிகத்தை கவனித்துக் கொண்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் ரிலையன்ஸுக்கு எதிராக தனது கணைகளைத் திருப்பியிருந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தண்டிக்காததற்கு அது அரசாங்கத்தை நேரடியாகக் குற்றம் சாட்டியது. வாடியா - கோயங்கா மற்றும் அம்பானிகளுக்கு இடையிலான யுத்தம் ஒரு புதிய திசையை எட்டி தேசிய நெருக்கடியானது. குருமூர்த்தியும் மற்றுமொரு பத்திரிகையாளரான முல்கோகரும் ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் உடன் பேசிவைத்துக் கொண்டு, பிரதமருக்கு அவர் சார்பாக ஒரு கடுமையான கடிதத்தையும் எழுதிக் கொடுத்தனர். ஜனாதிபதியின் கடித வரைவினை ஒரு பரபரப்பு செய்தியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. ஆனால் ராஜீவ் காந்திக்கு அனுப்பும் முன்னர் ஜெயில் சிங் தனது கடிதத்தில் மாற்றங்கள் செய்திருந்ததை பத்திரிகை உணரவில்லை. இந்த புள்ளியில் தான் அம்பானி இந்த சண்டையில் வெற்றி பெற்றார். இப்போது, மோதல் நேரடியாக பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ராம்நாத் கோயங்காவுக்கும் இடையில் என்றானது. அம்பானி சத்தமில்லாமல் வெளியில் சென்று விட்டார். பின் அரசாங்கம் டெல்லியின் சுந்தர் நகரில் இருந்த எக்ஸ்பிரஸ் விருந்தினர் இல்லத்தில் சோதனை செய்து, திருத்தங்களுடனான மூல வரைவினை முல்கோகரின் கையெழுத்தில் கண்டுபிடித்தது. 1988-89 வாக்கில், இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு எதிரான ஏராளமான வழக்குகள் மூலம் ராஜீவின் அரசாங்கம் பதிலடி கொடுத்தது. அதன்பின்னும் கூட, கோயங்கா தனது மதிப்புமிகுந்த உருவத்தை தொடர்ந்து கொண்டிருக்க முடிந்ததென்றால், அதன் காரணம் பலருக்கு அவசரநிலை பிரகடனத்தின் போது [மேற்கோள் தேவை] அவரது துணிச்சலான எதிர்ப்புநிலை கண்முன் தோன்றியதே காரணம்.
