ஆண்டொனி லாரண்ட் லவாஷியர் -  2

ஆண்டொனி லாரண்ட் லவாஷியர் - 2

bookmark

இதன் காரணமாக லவாஷியரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.அதே போல வெடி மருந்து தயாரிக்கும் முறையையும் கண்டு பிடித்தார் இவர். அவர் மூலம் நவீன போர் கருவிகளையும், வெடி குண்டுகளையும் பெருக்கிக் கொண்டது பிரஞ்சு அரசாங்கம். நாட்டுக்கு உழைத்தால் மட்டும் போதாது, நாட்டு மக்களுக்கும் உழைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட லவாஷியர் மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை சாடினார். அதில் இருந்து மக்களை மீட்டு எடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது தான் அவரது வாழ்க்கையில் ஏழரைச் சனி ஆரம்பமானது. அப்பொழுது சில மதவாதிகள் " தண்ணீர் மரமாகிறது - மரம் சாம்பலாகிறது- நீர் மண்ணாகிறது- மண்ணை பொன்னாக்க முடியும்" இவைகள் அனைத்தும் தெய்வத்தின் அருளால் முடியும் என மக்களை மூடநம்பிக்கைகள் மூலமாக ஏமாற்றி வந்தனர். இவற்றை முறியடிக்க அவர் மேற்கொண்ட ஆராய்சிகளின் விளைவாக செடி மரமாவது தண்ணீரால் மட்டும் அல்ல, நீரின் சத்து, காற்றில் கலந்துள்ள துகள்கள், மண்ணின் சாரம் ஆகியவைகள் சேர்ந்தே மரமாகிறது என்று புரிந்து கொண்டு. தான் புரிந்து கொண்ட அறிவியல் உண்மையை மக்களுக்கும் எடுத்துக் கூறினார். இதனால், ஏமாற்றிக் காசு பணம் பார்த்த மத வாதிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். அத்துடன் லவாஷியர் நிற்கவில்லை, மண் பானையில் உள்ள நீரானது கொதிக்க வைக்கும் பொழுது பாத்திரத்தின் பக்கங்களில் அரிப்பு ஏற்பட்டு நீர் ஆவியான பிறகு பாத்திரத்தில் அவைகள் தங்குகிறது. அது நீரில் இருந்த மண் அல்ல என நிருபித்து நீர் மண்ணாவது இல்லை என விளக்கம் அளித்தார். கடைசியாக இரும்பை எக்காலத்திலும் எத்தகைய தெய்வீகத் தன்மை உடையவராலும் தங்கமாக மாற்ற முடியாது என எடுத்துக் கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி பொது உடைமைக் கருத்துக்களை அவர்களிடம் போதித்தார்.

இந்த ஆய்வுகளின் மூலமாக மக்களிடம் லவாஷியர் அதிக செல்வாக்கைப் பெற்றார், அந்த செல்வாக்கின் காரணமாக ஆர்லியான்ஸ் மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.லவாஷியர் வாழ்ந்த காலத்தில் " ஹான்போல் மாரா" என்ற மதவாதி, பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தான். அவன் லவாஷியர் மீது கொண்ட பொறாமையின் காரணமாக , தனது பத்திரிக்கையில் அவரைப் பற்றி மிகவும் தவறாக எழுதி வந்தான்.மக்கள் மத்தியில் லவாஷியர் ஒரு அயோக்கியன் என்ற விதத்தில் எழுதி மக்களை அவருக்கு எதிராகத் தூண்டிக் கொண்டு இருந்தான்.மாரா லவாஷியரை பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்தான் அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.மாரா எழுதி பிரஞ்சு அறிவியல் கழகத்திற்கு அனுப்பிய ஆய்வு நூல் அப்போது அதன் முக்கிய உறுப்பினராக இருந்த லவாஷியர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது , மாராவின் அந்த ஆய்வு நூல் ஏற்றுக் கொள்வதற்கு நம்பகத் தன்மை இல்லாதது என லவாஷியர் அதனை நீராகரித்தார். ஆக, மாராவின் கோபத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

மாரா லவாஷியரை பழிவாங்க மதவாதிகளுடன் சேர்ந்து பல திட்டங்களைத் தீட்டினான். ஆனால் அவனது எந்தத் திட்டங்களும் பலிக்க வில்லை. தருணம் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த நேரத்தில் தான் பிரஞ்சுப் புரட்சி வெடித்தது. அந்தப் பிரஞ்சுப் புரட்சியில் ஹான்போல் மாரா ஒரு போர் படைத் தலைவனாக மாறினான்.கொடுங்கோல் ஆட்சி செய்த லூயி மன்னனையும் அவரது மனைவியையும் சிறை பிடித்து இறக்கம் காட்டாமல், தலைவாங்கும் கருவியான கில்லட்டின் கருவியால் அவர்களின் தலைகளைத் துண்டித்தான். மேலும், அந்த மன்னர் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம் சாட்டி மாரா தனது ஆட்களை அனுப்பி லவாஷியரையும், அவரது மாமனாரையும் கைது செய்து இழுத்து வந்தான்.

மாராவின் ஆட்கள் லவாஷியரை கைது செய்தது மட்டும் அல்லாமல், அவரது ஆய்வுக் கூடத்தை எவ்வளவு சேதப்படுத்த முடியுமோ, அவ்வளவு சேதப்படுத்தினார்கள். லவாஷியரின் வீடும் சூறை ஆடப்பட்டது. லவாஷியர் நீதி மன்றத்துக்கு உடனுக்குடன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தயாராக இருந்த மதவாத பொய் சாட்சிகள் மூலம், லவாஷியர் மீது அடுக்கடுக்காக குற்றங்கள் சுமத்தப்பட்டது. அவருக்கு இறுதியில் மரண தண்டனையை விதித்தான் மாரா. கி.பி.1794 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் காலை 6.00 மணிக்கு பிரஞ்சு நாட்டுத் தலைவாங்கும் எந்திரமான கில்லட்டின் உதவியால் லவாஷியரை இரு துண்டுகளாக பிரித்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டான் மாரா. அவரது உடலைக் கூட பொதுமக்கள் அல்லது அவரது உறவினர் கைக்கு கிடைக்கக் கூடாது என்று எண்ணிய கொடுங்கோலன் மாரா. அவரது அந்த உடலை சிதைத்து, சின்னாபின்னப் படுத்தினான். அவ்வளவு பெரிய விஞ்ஞானி இறுதில் இப்படி ஒரு முடிவைக் கண்டார். இருந்தாலும், இன்னும் அவரது கண்டுபிடிப்புகளை நாம் பாட புத்தகத்தில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு விஞ்ஞானி மரணம் அடைந்தாலும், அவனது கண்டு பிடிப்புகள் ஒரு போதும் மரணம் அடையாது என்பதற்கு லவாஷியரின் வாழ்க்கை ஒரு உதாரணம்.