அம்பேத்கர் - 3

அம்பேத்கர் - 3

bookmark

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன் ’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகஸ்ட் 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.

அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது. இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார்.டாக்டர். அம்பேத்கர் காஷ்மீர்க்கு தனி அந்தஸ்த்து வழங்குவதை விரும்பவில்லை.

அம்பேத்கர் பழங்கால இந்தியாவைப்பற்றியும் மானிடவியலைப்பற்றியும் செய்த ஆராய்ச்சியின் மூலம் மகர் மக்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பௌத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமத்தை விட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள் போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும் கருதினார் [சான்று தேவை]. இதனாலயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்று கருதினார்[சான்று தேவை]. இதைப்பற்றி யார் சூத்திரர்கள்? (Who were the Shudras?) என்ற புத்தகத்தை எழுதினார்.

பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டார் . புனேக்கு அருகில் புதிய பௌத்த விகாரை அர்பணித்த பின் தான் பௌத்தத்தை பற்றி புத்தகம் எழுதிக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது நிறைவடையும் என்று கூறினார். அதிகாரபூர்வமாக பௌத்த சமயத்திற்கு திரும்புவது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார். 1954ம் ஆண்டு இரு முறை பர்மாவிற்கு பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறை மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு ரங்கூனில் நடைபெற்றதில் கலந்து கொள்ள சென்றார். 1955ம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபாவை தோற்றுவித்தார். 1956ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார், அவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது.

இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை கலந்த பின் அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ல் நாக்பூரில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 500,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள். அதன் பின் இவர் காட்மண்டுவில் நடைபெற்ற நான்காவது உலக பௌத்த கருத்தரங்கத்திற்கு சென்றார். இவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது

1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் .1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்கநேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் . டிசம்பர் 16, 1956 அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் அவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரின் உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர் . அம்பேத்கரின் இரண்டாவது மனைவி 2003ல் மரணமடைந்தார். மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.