அலெக்சாண்டர் - 1
மாவீரன் அலெக்சாண்டர் பண்டைய கிரேக்க நாட்காட்டியின் மாதமான ஹெகடோம்பியன் மாதத்தில் ஆறாம் நாள் (தற்போதைய நாட்காட்டியில் தோராயமாக கிமு 356 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் நாள்) அன்று பண்டைய கிரேக்கப் பேரரசின் மக்கெடோனின் தலைநகர் பெல்லாவில் ஒலிம்பியாசுக்கும் பிலிப்புக்கும் மகனாக பிறந்தார். இவரது தந்தை இரண்டாம் பிலிப்பிற்கு ஏழு அல்லது எட்டு மனைவிகள் இருந்த போதிலும் இவரது தாயார் ஒலிம்பியாஸ் மூலம் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு உண்டு.
அலெக்சாண்டர் மக்கெடோனியானின் மென்மையான இளைஞனாக வளர்ந்தார். யாழிசை மீட்டுவதிலும், படிப்பதிலும், போர்க்கலையிலும், வேட்டையாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். அலெக்ஸாண்டர் பத்தாவது வயதில் இருந்தபொழுது தேச்சாலி என்னுமிடத்தில் இருந்து வந்த ஒரு வணிகர் அவரது தந்தையிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார். அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். அதோடு அந்த குதிரையை தானே பழக்கப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். சொன்னதைப்போல அதை அடக்கி பழக்கப்படுத்தியும் காட்டினார். புளூட்டாக் இதை தனது குறிப்பில் மிக விரிவாக புகழ்ந்து குறிப்பிடுகிறார். அரசர் பிலிப் தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், "மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப்போகிறாய், உன்னை பொருத்தமட்டில் மக்கெடோன் மிகச்சிறியது," என்று கூறினதாக புளூட்டாக் விளக்குகிறார். அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார்.
அலெக்சாண்டர் அந்த குதிரைக்கு பூசிஃபலாஸ் (ox-head) என்று பெயரிட்டார். அந்த பூசிஃபலாஸ் என்கிற குதிரை தான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடே சுமந்து வந்தது. பிற்காலத்தில் வயோதிகம் (தனது 30ஆம் வயதில்) காரணமாக அந்த குதிரை இறந்த பின்னர் அதன் நினைவாக ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் பூசிஃபலா (Bucephala) என்று பெயரிட்டார்.
அலெக்சாண்டரின் 13 ஆம் வயதின் ஆரம்பத்தில் அவரது தந்தை அவருக்கு கல்வி போதிக்க ஐசோக்ரேட்ஸ், ஸ்பீயூசிபஸ் போன்ற மிகச்சிறந்த அறிஞர்களை நியமித்தார். அவர்களுக்கு பின்னராக இரண்டாம் பிலிப் மன்னர் அரிஸ்டாட்டிலைக் கல்வி போதிக்க நியமித்தார். கல்வி போதிப்பதற்காக மைசாவில் இருந்த நிம்பஸ் கோயிலை வகுப்பறையாக கொடுத்தார். அலெக்சாண்டர் கல்விகற்று திரும்பும் தருணத்தில் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டிலின் சொந்த நகரான தன்னால் அழிக்கப்பட்ட ஸ்டாகிரா-வை மீண்டும் நிர்மாணித்து தருவதென ஒப்புக்கொண்டார். மேலும் அங்கு மக்களை குடியேற செய்து அங்கிருந்து அடிமைகளாக பிரிக்கபட்ட மக்களை விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்.
மைசா கோயிலானது டாலேமி, ஹேஃபைசன் மற்றும் காசந்தர் போன்ற இடங்களை போலவே இதுவும் அலெக்சாண்டரும் மற்றும் மாக்கெடோனியானின் மேன்மக்கள் வகுப்பினரின் குழந்தைகளும் பயிலும் வாரிய பள்ளி போலானது. அவருடன் பயின்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் அலெக்சாண்டரின் உற்ற நண்பர்களாகவும் நம்பிக்கைக்குரிய அரசு அதிகாரிகளாகவும் திகழ்ந்தனர். மேலும் சிலர் துணைவராகவும் இருந்ததாக அறியப்படுகிறது. அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கும் அவரது தோழர்கள் அனைவருக்கும் மருத்துவம், தத்துவம், நன்னெறி, மதம், தருக்கம், மற்றும் கலை போன்றவற்றை பயிற்றுவித்தார். அரிஸ்டாட்டிலின் போதனையில் அலெக்சாண்டர் அவரை சுற்றியுள்ள திசைகள் அனைத்திலும் உள்ள நாடுகளை அறிவது போன்ற பாடங்களில் மேம்பட்டிருந்தார். குறிப்பாக அரிஸ்டாட்டில் அலெக்சாண்டரை திசையனைத்திலும் உள்ள நாடுகளை பற்றிய கல்விதனை போதித்து வல்லுனராக மாற்றினார். அந்த அறிவே பின்னாளில் அலெக்சாண்டரை உலகம் முழுமையையும் சுற்றிவந்து வெற்றிகொள்ள வழிவகுத்தது.
மாவீரன் அலெக்சாண்டர் தன்னபிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்தார்.மிகச் சிறிய பிரதேசத்தில் இருந்து கிளம்பி, அவர் காலத்தில் அறியப்பட்ட நிலப்பரப்பில் பெரும்பகுதியை தனது வீரத்தால் வென்றார் அவர்.ஹோமரின் இலியட் ஒடிசி நூல்களை ஆர்வத்துடன் படித்தார் அவர். ஒரு முறை அரிஸ்டாட்டில் தனது கையில் சந்தனம், சாம்பிராணி உள்ளிட்ட சில வாசனைப் பொருள்களைக் காட்டி, "இவை அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தது. இந்தியா என்ற தேசத்தில் இருந்து வருகிறது" என்றார். அப்போது இளைஞராக இருந்த அலெக்சாண்டருக்கு இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அச்சமயத்தில், இவரது அப்பா பிலிப் ஒரு போரில் கொல்லப்பட, மனதில் பலவித கனவுகளுடன் தனது இருபதாவது வயதில் மன்னர் பொறுப்பை ஏற்றார் (அலெக்சாண்டர்). அவர் உலகமே தன்னுடைய நாட்டின் எல்லை தான் என்று நினைக்க ஆரம்பித்தார். அண்டை நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளைக் கைப்பற்ற தொடங்கினார். அப்போதும் அவரது நாடு பிடிக்கும் ஆசை திருப்தி அடையவில்லை.
அலெக்ஸாண்டர் டைரை கைப்பற்றிய பின்பு அவரது வழியில் காஜாவை தவிர இடைப்பட்ட அனைத்து எகிப்திய அரசுகளனைத்தையும் சுலபமாக வென்றார். வலிமையாக செரிவூட்டபட்டிருந்த காஜா குன்றுகளின் மீது கட்டபட்டிருந்த நகரமாகும். அதை வெல்ல அலெக்ஸாண்டர் கடுமையாக போராட வேண்டி இருந்தது. மூன்று வெற்றிகரமான திடீர் தாக்குதல்களுக்கு பின்பு அதன் வலிமை குன்றி காஜா வீழ்ந்தது. இந்த போருக்கு முன்பு அலெக்ஸாண்டருக்கு இப்போரில் ஏற்பட்டதை போல கடுமையான காயம் ஏற்பட்டதில்லை. அதேபோல ஜெருசலேம் அலெக்ஸாண்டரிடம் போரிடாமலேயே பணிந்து சரணடைந்தது.
கி.மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். அங்கு அலெக்ஸாண்டரை விடுதலையளிக்க வந்த ஒரு போராளியாக தான் மதித்தனர். அங்கு அவர் தன்னை பிரபஞ்சத்தின் தலைவராக உணர்ந்தார். கடவுளின் மகனாக பாவித்தார். இதற்கு பின்பு தான் அலெக்ஸாண்டர் அடிக்கடி கடவுள் ஜீயஸ்-அம்மோன்-ஐ தனது தந்தையாக சுட்டிக்காட்டினார் மற்றும் தான் மேம்பட்ட உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிடலானார்.
இவர் எகிப்தில் தங்கி இருந்த பொழுது எகிப்தில் எழுப்பப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா-வை நிறுவினார். அதுவே இவரது மறைவிற்கு பிறகு டோலேமைக் சாம்ராஜ்யத்தின் தலைமையாக பிற்காலத்தில் இருந்தது. கி.மு.331-ல் அலெக்ஸாண்டர் எகிப்தை விட்டு வெளியேறி கிழக்கு நோக்கி மெசபடோமியா நோக்கி பயணித்தார் (தற்போதைய வடக்கு ஈராக்). அங்கு குகமேலா-வில் நடந்த போரில் மீண்டும் டாரியஸை வீழ்த்தினார். அந்த போரிலும் போர்க்களத்திலிருந்து டாரியஸ் மீண்டும் புறமுதுகிட்டு ஓடினார்.
இந்த முறை அலெக்ஸாண்டர் டாரியஸை அரபெல்லா மலைத்தொடர் வரை துரத்திசென்றார். இங்கு குகமேலாவில் நடந்த சண்டையே இவர்களிருவருக்கிடையே நடந்த கடைசிப்போராகும். அலெக்ஸாண்டர் பாபிலோனை கைப்பற்றிய பொழுது டாரியஸ் அந்த போரிலிருந்து தப்பித்து எக்பட்டானா மலைத்தொடர்களை கடந்து ஓடினார். இந்த அனைத்து வெற்றிகளிலும் திருப்தி அடையாத அலெக்சாண்டர் தனது கவனத்தை இந்தியா மீது திருப்பினார்.
இண்டஸ் முதல் ஹைடஸ்பஸ் வரை விரிந்திருந்த அப்போதைய டக்ஸ்ஸில்லா ராஜ்யத்தின் அரசர் ஒம்பிஸ், சில மலைவாசி குழுக்கள், மற்றும் ஆஸ்பஸியோய், அஸ்ஸாகேநோயி போன்றவர்கள் அலெக்ஸாண்டரின் நண்பரிடம் பணிய மறுத்தனர்.
