ஹோ சி மின் - 2
வியட்நாமுக்கு அவர் திரும்ப வந்த போது. 1940ம் ஆண்டு. அப்பொழுது பிரான்ஸ் இடம் இருந்து வியட்நாமை ஜப்பான் கைப்பற்றியது. பிரான்சின் கொடுமையில் இருந்து விடுபட்டால் சரி என்று வியட்நாம் மக்கள் ஜப்பானியர்களுக்கு வரவேற்பு கொடுத்தார்கள். ‘‘எந்த நாட்டின் ஆதிக்கத்தோட கீழ இருந்தாலும் அடிமைகள் அடிமைகள் தானே... அதனால் இவர்களை விரட்டியடிச்சு தனது தேசத்தை சுகந்திர நாடாக மாற்ற முற்பட்டார் ஹோசி மின். மக்களிடம் போராட்ட உத்வேகத்தை ஏற்படுத்தினார் ஹோசி மின். இதனை பொறுத்துக் கொள்ளாத ஜப்பான் இவரை ஒடுக்க உடனடி நடவடிக்கைகளில் இறங்கியது. வியட்நாமில் அப்போது இருந்த அடர்ந்த காடுகள் ஹோசி மின்னுக்குப் புகலிடம் தந்து காப்பாற்றின. அந்தக் காட்டுக்குள் இருந்து கொண்டே ஒரு பெரும் கொரில்லாப் படையை உருவாக்கினார் ஹோ சி மின்.
1945ம் வருஷத்தில் ஜப்பான் மீது அமெரிக்க வீசிய அணுகுண்டுகள் ஜப்பானை அலற வைத்தது. இதனைப் பயன் படுத்திக் கொண்ட ஹோசி மின் ஜப்பானை முழுமையாக தனது கொரில்லாப் படையைப் பயன்படுத்தி நாட்டை விட்டே விரட்டி அடித்தார். பிறகு பிரான்ஸ் தேவை இல்லாமல் மீண்டும் யுத்தத்தில் இறங்கியது. பிரான்சுக்கும் ஒரு பாடத்தை கற்பித்தார் ஹோசி மின்.
அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின். இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவரின் போராட்டம். இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கொண்டு சென்றது.
பிரான்ஸ் ஹோ சி மின்-னை கம்யூனிஸ்ட் என்று அமெரிக்காவிடம் கூறி. அமெரிக்காவை மத்தியஸ்த்தம் செய்ய அழைத்தது. எப்போதுமே, யாராவது மத்தியஸ்தம் செய்ய நம்மை அழைக்க மாட்டார்களா என்று நாக்கை தொங்கப் போட்டு அலையும் அமெரிக்கா. பிரான்சின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. தான் புதிதாக தயார் செய்த ஆயுதங்களை சோதிக்க அமெரிக்காவுக்கு ஒரு சோதனை களமும் தேவைப்பட்ட காரணத்தால், 1965 இல் அது வியட்நாம் மீது அனாவசியமாக போரைத் தொடர்ந்தது.
தோல்வியே காணாத அமெரிக்கா முதன் முதலாக இப்போரில் தோல்வியை ருசித்தது. ஹோ சி மின்னால் பயிற்சி அளிக்கப்பட்ட வியட்நாமின் கொரில்லாப் படைகளால் அமெரிக்கப் படைகள் சிதறுண்டு போனது. பொறுக்க முடியாத அமெரிக்கா ‘நேப்பாம்’ என்கிற ஒரு கொடுமையான குண்டை வியட்நாம் மீது வீச ஒரு கிராமமே பற்றி எரிந்தது. அதில் தன் உறவுகளை இழந்த ஒரு சிறுமி, ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக கதறிக் கொண்டே ஓடி வந்த காட்சியும் அந்தச் சிறமியின் கதறலும் பார்த்தவர்கள் அனைவரது மனதையும் உருக்கியது. உலக நாடுகள், பொதுமக்கள் என அனைவரும் அமெரிக்கர்களுக்கு எதிராகத் திரும்பினார்கள். அத்துடன் நிற்கவில்லை, இந்தப் போராட்டத்தில் புத்த பிட்சுகளும் கலந்து கொண்டனர்.
புத்த பிக்குகள் அமைதியாகப் பெட்ரோலை ஊற்றிக் கொள்வார்கள். ஒரே ஒரு ஒற்றைத் தீக்குட்சியால் தங்களது உடலை பற்ற வைத்துக் கொள்வார்கள். எந்த சப்தமும் இல்லாமல் இறந்து போவார்கள். இதனை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய போது அமெரிக்க மக்களே, (வியட்நாம் போரில் அமெரிக்கா அத்துமீறியதைக் கண்டித்து) தன் சொந்த நாட்டுக்கு எதிராகவே குரல் கொடுத்தனர். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் என்ன செய்வது என்று அறியாது கையை பிசைந்தார் என்றாலும் , அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது, தன் பெரும் இராணுவத்தையும் அனுப்பியது.
அந்நிலையில், குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் ஹோ சி மின் வழிகாட்ட கொரில்லா போராளிகளாக மாறினர். பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமெரிக்க இராணுவத்தோடு போரிட்டாள். வியட்நாமியர்கள் அசராமல் அமெரிக்க ராணுவத்தை கொரிலா முறையில் நய்யப் புடைத்தனர். உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர். போரின் போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகும். அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன் தான், பின்னாளில் வளர்ந்து தன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட (இன்றும் மார்தட்டிக் கொண்டிருக்கிற) அமெரிக்கப் படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது. வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது. ஆனால் ,அப்போது அதனைப் பார்க்க ஹோ சி மின் உயிருடன் இல்லை. ஆனால், அவர் வியட்நாம் மக்களிடம் ஏற்படுத்திய போர் குணத்தின் தாக்கம், ஊட்டிய வீரம் அனைத்தும் இன்னும் கூட வியட்நாம் மக்களிடம் காணப்படுகிறது.
தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "சைகான்" அந்தப் புரட்சியாளனின் பெயரை எடுத்துக் கொண்டு வரைபடத்தில் "ஹோ சி மின்" நகரம் ஆனது.
