வில்ஹெம் கான்ராட் ரான்ட்ஜென்
மருத்துவ உலகின் மாபெரும் அதிசயங்களில் ஒன்றான எக்ஸ்-ரேவுக்கு அடித்தளம் இட்டவர் வில்ஹெம் கான்ராட் ரான்ட்ஜென் (Wilhelm Conrad Rontgen). ஜெர்மனி நாட்டின் 'லென்னப்’ (Lennep) எனும் ஊரில் 1845-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ரான்ட்ஜென் பிறந்தார்.
அறிவியல் சோதனைகளை செய்து கொண்டு இருக்கும் போது தற்செயலாக எதிர்பாராத சமயத்தில் கண்ணுக்குத் தெரியாத கதிர்வீச்சு ஒன்று வெளிப்பட்டதை ரான்ட்ஜென் கண்டார் .என்ன வகையான கதிர் அது,என்பது சரியாகத் தெரியாத காரணத்தால், அக்கதிர்களை இவர் " எக்ஸ் கதிர் (X- ray)" என்று அழைத்தார். " எக்ஸ்" என்பது, கணிதத்தில் அறியப்படாத ஒன்றுக்கு பயன்படுத்தப்படும் ஒரு குறியீடாகும்.
தமது இந்தத் தற்செயலான கண்டுபிடிப்பினால் பெரிதும் மனக் கிளர்ச்சியுற்ற ரான்ட்ஜென், தம்முடைய மற்ற எல்லா ஆராய்ச்சிகளையும் கைவிட்டு விட்டு, எக்ஸ்-கதிர்களின் குண இயல்புகளைக் கண்டுபிடிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். இவ்வாறு தான் கண்டுபிடித்த அனைத்தையும் மக்களுக்குப் பயன் படும் விதத்தில் ஆய்வுக் கட்டுரையாக 1895 ஆம் ஆண்டு டிசம்பரில் எழுதினார். இதனால் மருத்துவ உலகில் புதியதொரு சகாப்தம் தொடங்கியது. 1901 ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உயிரியல் முதல் வானியல் வரையில் அறிவியல் ஆராய்ச்சியின் பல்வேறு துறைகளிலுங்கூட எக்ஸ்-கதிர்கள் பயன்படுகின்றன. அணு மற்றும் மூலக்கூற்றுக் கட்டமைப்பு குறித்து ஏராளமான தகவல்களை அறியவும் விஞ்ஞானிகளுக்கு எக்ஸ்-கதிர்கள் துணை செய்துள்ளன.
தனது கண்டுபிடிப்பை காசாக்காமல் மக்களுக்கு பயன் படும் விதத்தில் தந்த ரான்ட்ஜென் 1923 ஆம் ஆண்டு மறைந்தார். ஆம், தான் இந்த உலகத்துக்கு வந்துபோன அடையாளமாக எக்ஸ் – கதிர்களை உலகத்திற்கு தந்துவிட்டு சென்று விட்டார்.
