வில்லியம் ஹார்வி
வில்லியம் ஹார்வி, இங்கிலாந்தில் 1578 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தமது பதினைந்தாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்பு இத்தாலியிலுள்ள பாதுவா பல்கலைக்கழகத்திற்குச் சென்றும் பயின்றார். அதே பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகவும் ஆனார். சுமார் முப்பது ஆண்டு காலம் அரசு மருத்துவராகவும், மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகவும் பணி புரிந்தார். உயிருள்ள ஓர் உடல் செயல்படும் விதத்தைக் காண விரும்பிய ஹார்வி உயிருள்ள விலங்குகளை அறுத்து பரிசோதிக்கத் தொடங்கினார்.
பிராணிகளை அறுத்துப் பார்த்து பல விவரங்களை சேகரித்தார். அதன் மூலம் இதயத்தை பற்றிய எண்ணற்ற ரகசியங்களை தெரிந்து கொண்டார். இதயம் ரத்தத்தை உடல் முழுவது சுற்றி வரச் செய்யும் பம்பு என்பதை அறிந்து கொண்டார். இவரது கண்டு பிடிப்புகள் மூலமாகத் தான் ரத்த ஓட்டம் பற்றியே உலகிற்கு தெரிய வந்தது. இரத்தம் திசுக்களுக்கு ஊட்டச்சத்து அளித்து அதில் இருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது என்பதைக் கண்டு பிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, வில்லியம் ஹார்வி முதலாம் சார்லஸ் மன்னரின் அபிமானத்துக்குரிய மருத்துவராக பணியாற்றினார்.
இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்படுவதையும் நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிப்பதையும் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு காலன் ரத்தம் அதன் வழியாக செல்வதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்தார். இதயத்திலிருந்து ரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிறது என்பதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.
இரத்த ஓட்டத்திற்கு மூல காரணம் இதயம் தான் என்பதை இவர் துல்லியமாகக் கண்டு பிடித்து சொன்னாலும், உலகம் முதலில் அதனை ஏற்கத் தயாராக இல்லை. நாளடைவில், பல சான்றோர்கள் ஹார்வியின் கருத்துக்கு செவி சாய்க்கவே, மக்களும் இவரை ஏற்றுக் கொண்டாடத் தொடங்கினர். தனது இறுதி மூச்சி வரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஹார்வி 1657 ஆம் ஆண்டு மறைந்தார்.
