வரைக்காட்சிப் படலம் - 961

bookmark

ஆடவரும் பெண்டிரும் விளையாடுதல்

மலைமேல் இனிது விளையாடல்
 
961.

பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என.
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி. அத்
துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும்
தங்கி. நீங்கலர். தாம் இனிது ஆடுவார்.
 
பொங்கு தேன் நுகர் - பெருகும் தேனை உண்ணுகின்ற; பூ மிஞிறு
ஆமென -  பூக்களில் மொய்க்கும் வண்டுகள் போல; எங்கும் மாதரும்
-  எல்லா   இடங்களிலும்  மகளிரும்; மைந்தரும் ஈண்டி - ஆடவரும்
நெருங்கி;  அத்  துங்க  மால்வரை  - ஓங்கிய பெரிய அம்மலையின்;
சூழல்கள் யாவையும்- சாரல்களிலெல்லாம்; தங்கி - வசித்து; நீங்கலார்
-  (அம்  மலையை  விட்டு) பிரிந்து செல்ல மனம் இல்லாதவராய்; தாம்
இனிது ஆடுவார் - (தாம்) இனிமையாக விளையாடினார்கள்.

வண்டுகள்    மலர்களில் மொய்த்து அவற்றிலுள்ள தேனை உண்பது
போல     மைந்தரும்     அம்    மலைச்   சாரல்களில்   மொய்த்து
ஆங்காங்குள்ள வளங்களை நுகர்ந்தனர் என்பது.                 34