வரைக்காட்சிப் படலம் - 960

bookmark

960.

ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி-
வாக மால் ஐயன் நின்றெனல் ஆகுமால்-
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்
ஏக. மாலை கிடந்தது. கீழ் எலாம்.
 
மேக  மாலை -  (அம் மலையில்)  மேக வரிசைகள்; மேல் எலாம்
மிடைந்தன  - மேலிடம்  முழுதும்  நெருங்கினவாய்; கீழ் எலாம் ஏக
மாலை - கீழிடமெல்லாம் ஒரே மாலைத் திரளாக; கிடந்தது - கிடக்கும்
(அம்   மலை)   (அதனால்);   ஆகம்  ஆலையம்  ஆக  -  (தன்)
திருமார்பைக்  கோயிலாகக்  கொண்ட;  உளாள்  பொலி  - திருமகள்
விளங்குகின்ற;   வாக    மால்   உளார்   -   அழகிய   திருமால்
தங்கியிருக்கின்றார்;   எனல்   ஆகும்   -  என்று  சொல்லுவதற்குப்
பொருந்தும். 

அம்  மலையின்   மேற்புறத்தில்   எல்லாம்   மேகங்கள்   வரிசை
வரிசையாகப்  படிந்துள்ளன.  கீழ்புறத்தில்  மலர்மாலைகள் கிடக்கின்றன;
இவற்றால்  அம்  மலை  பலரால்  அருச்சிக்கப்பட்ட  மலர்மாலையைப்
பூண்ட  கரிய  திருமால்  போல  விளங்கும்  என்பது.  வாகு (அழகு) -
வாக  எனத் திரிந்தது - குறிப்புப் பெயரெச்சம்.  மேகம்  சூழ்ந்த  மலை
திருமாலுக்கும் மாலைகள் திருமகளுக்கும் உவமிக்கப் பெற்றன.       33