வரைக்காட்சிப் படலம் - 950

bookmark

950.

கை என மலர வேண்டி
   அரும்பிய காந்தள் நோக்கி.
பை அரவு இது என்று அஞ்சி.
   படைக் கண்கள் புதைக்கின்றாரும்;
நெய் தவழ் வயிரப் பாறை
   நிழலிடைத் தோன்றும் போதை.
‘கொய்து இவை தருதிர்’ என்று.
   கொழுநரைத் தொழுகின்றாரும்;
 
கை  என மலரவேண்டி - (பெண்களின்) கை போல மலர வேண்டி;
அரும்பிய காந்தள்  - அரும்பிய காந்தளை; நோக்கி - பார்த்து; இது
பை  அரவு  -  இது படத்தையுடைய பாம்பு; என்று அஞ்சி - என்று
கருதி   அச்சப்பட்டு;   படைக்  கண்கள்  -  (தம்)  வேல்  போன்ற
கண்களை; புதைக்கின்றாரும் - (கைகளால்) மூடிக் கொள்பவரும்; நெய்
தவழ்   வயிரப்பாறை   -  வெண்ணெய்  போல  விளங்கும்  வயிரப்
பாறைகளின்;  நிழலிடைத்  தோன்றும்  -  ஒளியிலே  தோன்றுகின்ற;
போதை  - மலரை (உண்மையான மலரென்று மயங்கி); இவை கொய்து
-  இம்  மலர்களைப்  பறித்து;  தருதிர்  என்று  - தாருங்கள் என்று;
கொழுநரைத்  -  (தம்)  கணவரை;  தொழுகின்றாரும்  -  வணங்கிக்
கேட்பவரும் (பெண்களும்). 

காந்தள்     மலர்வது  கை  போல்  இருக்கும் காந்தள் அரும்பைப்
படமுடைய  பாம்பாகவும்.  வயிரப்   பாறையில்  நிழலாகத்  தோன்றும்
மலரை உண்மையான பூவாகவும் கொண்டு  மகளிர் மயங்கினர்  என்பது
- மயக்கவணி.                                             23