வயிரவச் சக்கரம்

bookmark

1291.
அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்தஅச் சத்தமி மேல்இவை குற்றம்
அறிந்துஅவை ஒன்றுவிட்டு ஒன்றுபத் தாக
அறிந்து வலமது வாக நடவே. 1
1292.
நடந்து வயிரவன் சூல கபாலி
நடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே. 2
1293.
ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே. 3
1294.
கையவை யாறும் கருத்துற நோக்கிடும்
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்கு மெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே. 4
1295.
பூசனை செய்யப் பொருந்துஓர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆகுமாம்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே. 5
1296.
வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே. 6