லெனின் - 3
லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர். உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். வன்முறை இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தி வந்தார். "வர்க்கப் போராட்டத்தில ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை!" என்று அவர் வலியுறுத்தினார். "தொழிலாளர் சர்வாதிகாரம்" பற்றி மார்க்ஸ் இங்குமங்கும்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லெனின் இந்தக் கோட்பாட்டைத் தீவிர வெறியுடன் பின்பற்றினார். "தொழிலாளர் சர்வாதிகாரம் என்பது வன்முறையின் அடிப்படையில் அமைந்த அதிகாரமேயன்றி வேறில்லை. அந்த அதிகாரத்தை சட்டத்தினாலோ, ஆட்சியினாலோ கட்டுப்படுத்த முடியாதது" என்று அவர் நம்பினார். லெனினுடைய பொருளாதாரக் கொள்கைகளை விட, சர்வாதிகாரம் பற்றிய அவரது கொள்கைகள் தாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். சோவியத் அரசின் தனிச் சிறப்புக்குக் காரணம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல (வேறு பல நாடுகளிலும் சோசலிச அரசுகள் ஆள்கின்றன). மாறாக அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் உத்திகள் தாம் தனித்தன்மை வாய்ந்தனவாகும். லெனினின் காலம் முதற்கொண்டு உலகின் ஒரு முறை நிலையாக வேரூன்றி விட்ட எந்த ஒரு பொதுவுடைமை அரசும் கவிழ்க்கப்பட்டதில்லை.
லெனின் தமது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார். அவர் ஈடிணையற்ற எழுத்தாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய நூல்கள் 55 தொகுதிகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. லெனின் தமது புரட்சிப் பணியில் தீவிர ஈடுபாடுடையவராக இருந்தார். அவர் தமது குடும்பத்தை நேசித்த போதிலும், அந்தக் குடும்பப் பாசம் தமது அரசியல் பணிக்கு இடையூறாக இருக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.
லெனின் மரணம்: லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் உழைத்து வந்தது அவருடைய உடல் நலத்தைச் சீர் குலைத்தது. அதனால் 1922 மே மாதம் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவர் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியது. பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. டிசம்பரில் இவரது வலக்கையும் செயல் இழந்தது. அது முதல் முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவினால் நாடெங்கும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடல் தைலமூட்டி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைக்கப் பெற்றது. அந்த உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
