முதலாம் இராஜராஜ சோழன்

bookmark


முதலாம் இராசராச சோழன்" சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராச ராச சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

புகழ் பெற்ற இளவரசன்

முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.

சோழர்களின் மெய்க்கீர்த்திகள்

பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராஜராஜ சோழனே.

இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவர் மகன் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.

இராஜராஜனின் மெய்க்கீர்த்திகள்

சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

கீழ்வருவது இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.

"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."

இரண்டாம் வகையான மெய்க்கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது 20ம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராஜராஜன் மதுரையை அழித்தார் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவருடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றூம் கூறுகிறது.

மேலும் இவன் காலத்திலேயே வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றியமைக்கப்பட்டன.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.

பட்டங்கள்

இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.

இராஜேந்திரன் இளவரசுப் பட்டம் பெறுதல்

இராஜராஜ சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராஜேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராஜராஜனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராஜேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராஜராஜ சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி கி.பி 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது.