மிதிலைக் காட்சிப் படலம் - 614

bookmark

சீதாபிராட்டி நிலைகண்ட செவிலியர்
முதலியோர் செயல்

தாதியர் செய்த பரிகாரம்
 
614.

தாதியர். செவிலியர். தாயர். தவ்வையர்.
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர்;
‘யாதுகொல் இது?’ என. எண்ணல் தேற்றலர்;
போதுடன் அயினி நீர் சுழற்றிப் போற்றினர்.
 
(சீதையின்)  தாதியர்  -  பணிப்  பெண்களும்;  செவிலியர் -
செவிலியர்களும்; தாயர் - ஐந்துவகைத் தாய்மார்களும்; தவ்வையர் -
தமக்கை முறையினரும்; மாதுயர் உழந்து உழந்து - (சீதை அடைந்த
நோயால்) கடுந் துன்பத்தை  மிக  அடைந்து;  அழுங்கி -  பெரிதும்
வருந்தி; மாழ்கினர் -  மனம்  கலங்கினவர்களாகியும்;  இது  யாது
கொல்என - இந்த நோய் எந்த நோயோ என; எண்ணல் தேற்றலர்
- ஆலோசித்து அறியமாட்டாதவர்களாகியும்; போதுடன்  அயினிநீர்
- பல   பூக்களோடு  கூடிய  ஆலத்தி நீரை; சுழற்றிப் போயினர் -
சுற்றி (அவளுக்குக் கண்ணூறு கழித்து) வாழ்த்தினார்கள்.   

சீதையின்     காமநோயை   அறியாமல்  தோழியர்  முதலோர்
கண்ணூறெனக்   கருதி  அதற்குப்  பரிகாரம்  தேடினர்;  அயினிநீர்.
செஞ்சோற்றுடன்   கூடிய  நீர்.  கண்ணூறு  அச்சம்  ஆகியவற்றால்
உண்டாகிய குற்றம் களைவது.  

தாயர்  ஐவர்: 1.ஆட்டுவாள் 2. ஊட்டுவாள் 3. ஒல் உறுத்துவாள்
4. நொடி பயிற்றுவாள் 5. கைத்தாய். செவிலியர்: வளர்க்கும் தாயர்.  51