மிதிலைக் காட்சிப் படலம் - 603

bookmark

காதல் விஞ்சிய சீதாபிராட்டியின் நிலை (603-607)

சீதையின் காதல் நோய்

603.

பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும்?-
நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலும். மனம் எனும் மத்த யானையின்
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே!
 
நறை கமழ் அலங்கலான்- நறுமணம் கமழும் பூமாலை அணிந்த
இராமன்;  நயன  கோசரம்  மறைதலும்  -  சீதையின்  கண்ணின்;
பார்வைக்குப்  புலனாகாமல்  மறைந்த  அளவில்;  மனம்  எனும் -
(அவளது)  மனம்   என்ற;  மத்த  யானையின்  -  மதம் பிடித்த
யானையை அடக்குகின்ற;  நிறை   எனும்  அங்குசம்  -  (நிறை)
உறுதியாகிய அங்குசமும்; நிமிர்ந்து போயது - நிமிர்ந்து போயிற்று.
(அவ்வாறு  நிமிர்ந்து போக); பிறை எனும்  நுதலவள்  -  பிறைச்
சந்திரனைப் போன்ற  நெற்றியுடைய  அச்  சீதையின்;   பெண்மை
என்படும் - நாணம் முதலான பெண்மைக் குணங்கள் (வேறு) என்ன
நிலைமையை அடையும்?

தன் கண்களுக்கு யானைப் பாகன் மறைந்த கணமே மதம் பிடித்த
யானை  தன்னை அடக்குகின்ற அங்குசத்தை நிமிரச் செய்து அதைத்
தள்ளிவிட்டுத்  தான்  விரும்பின  வழியே  செல்லுதல்போலத்  தான்
விரும்பும்   தலைவனான   இராமன்   மறைந்து சென்ற  அளவிலே
சீதையின்   மனம்   தன்னை  அடக்கி  வைக்கும்  நிறை  என்னும்
குணத்தை  நீக்கித்  தான் விரும்பியவழிச் சென்றது என்றார். சிந்தை.
நிறை.  மெய்ந்நலன்களாகிய  பெண்மைக் குணங்கள் யாவும் சிதைந்து
ஒழிந்தன என்பது குறிப்பு.

‘எழில்மருப்பு    எழில்வேழம்   இகுதரு   கடாத்தால்.  தொழில்
மாறித்தலைவைத்த கோட்டிகை நிமிர்ந்தாங்கு’ - (கலித். 138)

‘துடக்குவரை நில்லாது தோட்டி நிமிர்ந்து. மதக்களிறு இரண்டுடன்
மண்டியா அங்கு’ (பெருங். 1. 32;37-38)                      40