மிதிலைக் காட்சிப் படலம் - 600
600.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து.
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.
வரி சிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும்.
இருவரும் மாறிப் புக்கு. இதயம் எய்தினார்.
பருகிய நோக்கு - (தமக்குள் ஒருவரது அழகை ஒருவர்)
விழுங்கிய கண்பார்வை; எனும் பாசத்தால் பிணித்து - என்னும்
கயிற்றால் கட்டி; ஒருவரை ஒருவர் தம் உள்ளம் - ஒருவரை
மற்றொருவரது மனம்; ஈர்த்தலால் - இழுத்து நின்றதால்;
வரிசிலை அண்ணலும் - கட்டமைந்த வில்லையுடைய இராமனும்;
வாள்கண் நங்கையும் - வாள் போன்ற கண்களையுடைய
பெண்களில் சிறந்த சீதையும்; இருவரும் - ஆகிய இருவரும்;
இதயம் மாறிப் புக்கு - (ஒருவர்) மனத்துள் (ஒருவர்) மாறிப்
புகுந்து; எய்தினார் - அடைந்தார்கள்.
சீதை. இராமன்: இருவரும் தம் கண் பார்வையால் காதல் கொண்டு
ஒருவரது மனத்தில் மற்றொருவர் குடிகொண்டார் எனலாம். இங்கே
இராமனுக்குச் சீதையும். சீதைக்கு இராமனும் உயிராவார்கள் என்பது
குறிப்பு. விற்படையும் வாட்படையும். தலைமகனாகிய இராமனுக்கு
விற்படை. ஆதலால் தலைவியான சீதைக்கு வாள்படை கூறியது நயம்.
‘தானும் தன்னுடைத் திண்பால் நெஞ்சினைத் திரிதல் ஒன்றின்றி
‘என்னுழை நிறீஇ’ (பெருங் 3:8:96-97)
‘நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும்
குறிப்புரையாகும்’ (தொல். பொருள். 66) 37
