மத்திய சாக்கிர அவத்தை

bookmark

2167
சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை
சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. 1
2168
மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னி
ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே. 2
2169
மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே. 3
2170
மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று
சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே. 4
2171
வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்
உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே. 5
2172
நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்
கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே. 6
2173
ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டான்அடி காணலும் ஆமே. 7
2174
நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே. 8
2175
ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே. 9
2176
பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே. 10
2177
விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே. 11
2178
நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்
மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. 12
2179
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே. 13
2180
தத்துவ மானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே. 14
2181
அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே. 15
2182
சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு
நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே. 16
2183
ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு
ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே. 17