மகேந்திரப் படலம்

கிட்கிந்தா காண்டம்
சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.
மகேந்திரப் படலம்
கடலைக் கடப்போர் யாரென வானரர் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். நீலன், அங்கதன், ஜாம்பவான் முதலியோர் தம் இயலாமையைக் கூறுகின்றார்கள்;
அச்சமயம் 'அனுமனே தக்கவன்' எனச் ஜாம்பவான் உரைக்கிறான்; அந்த அனுமனது வீரத்தைச் ஜாம்பவான் புகழ்ந்துரைக்கிறான்; அனுமன் இலங்கை செல்ல உடன்படுகிறான். பின்னர், மகேந்திர மலையின் உச்சிக்குச் செல்லுகிறான்; கடலைத் தாவிச் செல்ல அனுமன் பெருவடிவு கொள்கிறான். இவையே இந்தப் படலத்தில் காணப்படும் செய்திகள் ஆகும்)
கழுகரசன் சம்பாதி சென்ற பிறகு, வானர வீரர்கள் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தார்கள். அவர்கள் தங்களுக்குள் "கழுகளுக்கு அரசனான சம்பாதி பொய் சொல்ல மாட்டான்! ஆகவே, இப்போது நாம் கடலைக் கடந்து சென்று பிராட்டியைக் கண்டு வருவதே செயற்கரிய செயலாகும்" என்று கூறிக் கொண்டனர்.
அப்போது அவர்களுக்குள் "யார் கடலைக் கடந்து அவ்வளவு தூரம் இலங்கைக்குச் செல்வார்கள்? அது யாரால் தான் முடியும்?" என்று கேட்க. அந்தக் கேள்வி எழுந்தவுடன் வானர வீரர்களில் பலர் அவ்வாறு கடலைக் கடந்து செல்லும் திறமை தங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து அமைதியாகப் பேசாமல் இருந்தனர். நலன், நீலன் போன்ற வலிமைபடைத்த வானர வீரர்கள் தங்களால் கடலைத் தாண்டி செல்வது இயலாத காரியம் என்பதை வாய் விட்டே வெளிப்படையாக சொன்னார்கள்.
அங்கதனோ, "நான் இங்கிருந்து கடலைக் கடந்து இலங்கைக்குப் போய் விடுவேன். ஆனால், திரும்பி வருவது என்பது என்னால் முடியாத காரியம்" என்று தனது இயலாமையை வெளிப்படையாகக் கூறினான்.
உடனே மற்ற வானர வீரர்கள், ஜாம்பவானைப் பார்த்தனர். உடனே ஜாம்பவான், "நான் போய் வருவேன். ஆனால், இப்போது அது என்னால் முடியாது. முன்பு எம்பெருமான் திரிவிக்கிரம அவதாரம் எடுத்த போது, உலகெல்லாம் நிறைந்து இருந்த அவரைப் பதினெட்டு முறை வலம் வந்து இப்பூமியில் எங்கும் எனது காலடிகளைப் பதித்தேன். அதனால் வலிமை குன்றி கால் வலியால் வருந்தினேன். இன்னும் கூட அந்த வருத்தம் நீங்கவில்லை. ஆதலால் இலங்கை நகர் சென்று பிராட்டியைப் பற்றி அறிந்து கொண்டு திரும்பி வருவது இப்போது என்னால் கூடுமோ?" என்று தான் கடலைக் கடக்க முடியாத காரணத்தைக் கூறினான்.
பின்பு, அவன் வாலியின் குமரனை நோக்கி, "நாம் நம்மையன்றி வேறொருவரை இக்காரியம் செய்யும் படி கூறலாம். ஆனால், அது பிறர் நம்மைப் பழிப்பதற்க்குக் காரணமாகி விடும். எனவே, நம்மில் ஒருவரே கண்டிப்பாகக் கடலைக் கடந்து சென்றாக வேண்டும். இதற்குரிய வலிமை, யோசித்துப் பார்த்தால் நம்மில் அனுமனுக்கே உண்டு!" என்றான்.
ஆனால், சிறுவயதில் அனுமன் செய்த குறும்புக் காரியங்களைப் பொறுக்கமுடியாத முனிவர்கள். "உனது பலத்தைப் பற்றி உனக்குப் பிறர் புகழ்ந்து சொல்லும் வரையில், அது உனக்கே தெரியாமல் போகட்டும்" என்று சபித்து இருந்தனர். அதனால் தனது பலத்தை தன்னாலேயே உணர இயலாத அனுமான் கடல் கடந்து செல்லும் வலிமை தனக்கு உண்டு என்பதை அறியாமல் சோர்ந்து போய் காணப்பட்டான்.
அது கண்ட ஜாம்பவான் வானர வீரர்கள் சூழ அனுமனைப் புகழ்ந்து பாடினான். அந்தப் பாடலின் பொருள் இது தான்:
"அனுமான் நீ பிரம்மனின் வரத்தால் சிறஞ்ஜீவிகளுள் ஒருவன்! உனக்கு அழிவே கிடையாது! உன்னை இந்த உலகத்தில் ஜெயிக்கக் கூடியவர் தான் உள்ளனரா? நீ குழந்தைப் பருவத்திலேயே காலையில் தோன்றிய சூரியனைப் பழுத்த பழம் எனக் கருதி சூரிய உலகம் வரை சென்று சூரியனை விழுங்க முற்பட்ட வீரன் ஆயிற்றே! அப்போது கிரகண வேலையில் சூரியனை விழுங்க முன்வந்த ராகுவை கைகளால் பிடித்து அவனுக்கே பயத்தை ஏற்படுத்தியவன் ஆயிற்றே! இந்திரன் உன்னால் சூரியனுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று கருதி வஜ்ராயுதம் கொண்டு உன்னை அடித்தும் நீ உயிர் பிழைத்தவன் ஆயிற்றே! சூரியனின் சீடன் ஆயிற்றே! வாயுவின் பலசாலியான மகன் ஆயிற்றே! தேவ ரிஷி நாரதரிடம் இசை பயின்ற நல்ல இசை ஞானி ஆயிற்றே! உமக்கு நிகர் நீர் தானே! உன்னை போல ஞானவான் உலகத்தில் உண்டோ! நினைத்த நேரத்தில் நினைத்த வடிவத்தை எடுக்கக் கூடியவன் நீ! அதனால் மழை தான் உன்னை என்ன செய்யும்? இல்லை வெயில் தான் உனக்குத் துன்பம் தருமோ? யமனின் அருளால் எந்த வியாதியும் உன்னை அணுகாதே! உன்னைப் பிடிக்க வந்த சனி பகவானையே அடித்து விரட்டியவன் ஆயிற்றே! தர்ம வழியில் செல்லாத வாலியைக் கொல்ல வழி செய்தவன் நீ அல்லவா? பிரம்மாஸ்த்திரம், பாசுபதாஸ்த்திரம், நாராயண அஸ்த்திரம் கூட உனக்கு ஒரு தீங்கும் செய்யாதே! நீதி வழியில் நிற்பவனே! நல்லவனே! சத்திய குணம் கொண்டவனே! நீ அந்த ஈசனின் பதினோராவது ருத்திர அம்சம் அல்லவா? அதனால் நீ அரக்கர்கள் தொழும் அந்த ஈசனுக்கும் நிகரானவன் ஆயிற்றே! வேதங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தவரே! அந்த வேதத்தின் பொருளே! தடைகளைக் கண்டு அஞ்சாதவரே! அந்தத் தடைகளுக்கே தடைகளைத் தருபவரே! சொல்லின் செல்வரே! பேராண்மை கொண்டும் பெண்களை தாயாகக் கருதும் குணம் கொண்டவரே! இப்படிப் பட்ட நீயே இப்போது எங்களுக்கு அடைக்கலம். கிளம்புங்கள் மாருதி இந்தக் கடலும் உமக்கு ஒரு பொருட்டோ? இந்தக் கடல் நீர் அனைத்தையும் உள்ளங்கையில் அள்ளிக் குடிப்பவர் நீர் அல்லவோ! அதனால் ராமன் அளித்த பணியை சிறப்புடன் செய்வீராக! இலங்கைக்கு செல்வீராக! சீதையைக் கண்டு இராமன் கூறிய வார்த்தைகளால் தேற்றி வருவீராக" என்றெல்லாம் ஜாம்பவானும் மற்ற வீரர்களும் அனுமனைப் பாடிப் புகழ.
அனுமனுக்கு தனது பழைய பலத்தின் ஞாபகம் அனைத்தும் திரும்ப வந்தது. உற்சாகம் அடைந்தான். அப்போது தனது வானர நண்பர்களைப் பார்த்து, "இப்பொழுது நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பும், இராமபிரானின் அருளும் எனக்கு வலிய இரு சிறகுகளாக மாற, இந்தக் கடலைத் தாண்டி விடுவேன். இதனை நீங்கள் பார்ப்பீர்களாக! நான் இலங்கை சென்று பிராட்டியைக் கண்டு திரும்பி வரும் வரையில், நீங்கள் இங்கேயே சுகமாகத் தங்கியிருங்கள். விரைவில் எனக்கு விடை கொடுங்கள்!" என்றான்.
அனுமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வானர வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவனைத் துதித்தார்கள். உடனே வான் முட்டும் மகேந்திர மலையின் மீது ஏறி நின்றான். அக்கணமே விஸ்வ ரூபம் பெற்றான். முன்பு இராமலக்ஷ்மணர்களுக்குக் காட்டிய ரூபத்தை விட வானளாவ நின்றான். பேருருவத்துடன் மகேந்திரமலையில் நின்று இருந்த வாயுபுத்திரன் அப்போது, திருமால் அவதாரம் எடுத்த மகாகூர்மத்தின் முதுகின் மேல் மந்திரமலை நிற்பது போல் தோன்றினான். அது மட்டும் அல்ல, அனுமன் அண்டத்தைத் தாங்கும் பெருந்தூண் போல் நிற்க, அவனது பெரும் வடிவத்தைத் தாங்கி, அவ்வடிவுக்கு முன் சிறுத்துத் தோன்றுகின்ற அந்தமலை தூணின் கீழ் வைக்கும் கல்லைப் போலக் காணப்பட்டது!