மகன் பெருமை

bookmark

பட்ட மரம் பாலூறும், 
பாவல்காய் தேனூறும், 
உளித்தமரம் தான் தழையும், 
உத்தமியாள் வாசலிலே, 

வடக்கே ஒரு மூங்கில் 
வளருதில்ல கல்zமூங்கில் 
வில்லுக்கு வில்லாகும் 
விஜயனுக்கு அம்பாகும்
சொற் கேளா அர்ச்சுனர்க்கு 
கண்டு வில்லு அம்பாகும் 

வடக்கே மழை பேஞ்சு 
வாசலெல்லாம் தண்ணி 
தண்ணி வந்தன சயலிலே-நீ 
தங்கி வந்த தாமரையோ?

வடக்கே மழை பேஞ்சு 
வார்ந்த மணல் ஓடிவர 
நடந்து போ பாலகனே-உன் 
நல்ல தடம் நான் பார்க்க

வடக்கே ஒரு தாள் 
வர்ணலட்சம் பூப்பூக்கும் 
வாடை யடியாதோ 
வரிசை மகன் கண்ணயர

தெற்கு ஒரு தாழை 
தென் லட்சம் பூப்பூ க்கும் 
தென்றல் அடியாதோ 
செல்ல மகன் கண்ணயர?

வைகை பெருகிவர 
வாளை மீன் துள்ளிவர 
துள்ளி வந்த மீனுக் குல்ல-வேலவா 
தூண்டி வலை போட்டாரே

பத்து வருஷமோ 
பாலனில்லா வாசலிலே 
கைவிளக்கு கொண்டு 
கலி தீர்க்க வந்தவனோ?

விளக்கிலிட்ட எண்ணெய் போல 
வெந்துருகி நிக்கயில 
கலத்திலிட்ட பால்போல 
கைக்குழந்தை தந்தாரே 

மலடி மலடி என்று 
மானிடர்கள் ஏசுகிறார் 
மலட்டுக் குலமதையே-நீ 
மறப்பிக்க வந்தவனோ!

மலடி புழுங்கலை-ரெண்டு 
மான் வந்து திங்குதின்னு 
மாதாளங்கம்பு வெட்டி-நீ 
மான் விரட்ட வந்தவனோ 

கொல்லையிலே தென்னை வச்சு 
குறுத்தோல கொட்டாஞ் செஞ்சு 
சீனி போட்டுத் திங்க 
செல்வமே பிறந்தவனோ! 

வில்வப் பொடி மணக்கும் 
விரிச்ச தலைப் பூமணக்கும் 
கதம்பப் பொடி மணக்கும் 
கட்டழகன் கடந்தலிலே.

வட்டார வழக்கு: மணக்குதில்ல - மணக்கிறதல்லவா? 
அழிச்சாரே-அழித்தாரே; வந்தடைஞ்ச-வந்தடைந்த, துவை வேட்டி-துவைத்த வேட்டி, வச்சளக்க-வைத்தளக்க: பூ வெறங்கும்-பூ இறங்கும்; பேஞ்சு-பெய்து
குறிப்பு: மலட்டாறு-திருவெண்ணெய் நல்லூர் அருகில் ஓடுவது, இவ்வாற்றில் நீரோடுவது அபூர்வம். தண்ணீர் ஓடாததைப்பொதுவாக இச்சொல் குறித்தது."பட்டமரம்" "பாலுறும்" முதலியன.

மலடியாகவிருந்தால் தொட்டதெல்லாம் துலங்காது என்ற நம்பிக்கை பெண்ணுள்ளத்தில் வேரூன்றி நிற்கிறது. மலடி என்ற பகுதியில் காணப்படும் பாடலில் இதனைக் காணலாம். இவளுக்கு மகன் பிறந்துவிட்டதால் செத்தமரமும் தளிர்த்து விடுமாம். கல்யாண பாகற்காய் இனிப்பாகி விடுமாம். உளுத்த மரமும் தழைத்து விடுமாம். மாமன் தாசிக்குச் செலவழித்த பணம் பெருமையாகப் பேசப்படுகிறது.

சேகரித்தவர்: கார்க்கி 
இடம்: சிவகிரி வட்டாரம்,
-------------