பூக் கொய் படலம் - 1008

bookmark

காமன் ஆயனைப் போலுதல்

1008.

சோலைத் தும்பி மென் குழல் ஆக.
   தொடை மேவும்
கோலைக் கொண்ட மன்மத ஆயன்.
   குறி உய்ப்ப.
நீலத்து உண்கண் மங்கையர் சூழ.
   நிரை ஆவின்.
மாலைப் போதில் மால் விடை
   என்ன வருவாரும்.
 
சோலைத்     தும்பி  மென்குழல்  ஆக - சோலைகளில் உள்ள
வண்டுகளின்  ஒலி.  மெல்லிய   இசையினைக்  கொண்ட புல்லாங்குழல்
ஒலி  ஆக;  தொடை  மேவும் கோலைக் கொண்ட  -  மலர்மாலை
கொண்டு   சுற்றியுள்ள   கோலை   ஏந்திய;   மன்மத   ஆயன்  -
மன்மதனாகிய  இடையன்;  குறிஉய்ப்ப  - (மனை  திரும்ப வேண்டிய)
அடையாளத்தைக்  (குழல் மூலமாகத்) தெரிவிக்க;  மாலைப் போதில் -
மாலைக் காலத்தில்; நிரை ஆவின்மால் விடை என்ன - (வீடு நோக்கி
வருகின்ற)  பசுக்கூட்டத்தின்   இடையே  பெரிய  காளைகள் (வருவது)
போல; நீலத்து உண்கண்  மங்கையர்  -  கருங்குவளைமலர் போன்ற
மையுண்ட  கண்களையுடைய  மடந்தையர்கள்;  சூழ  வருவாரும்  -
(சுற்றிலும்) சூழ்ந்து வர வருகின்றவர்களும். 

(23     ஆம் பாட்டின் இறுதியிலிருந்து இப் பாடல்வரை. திரிவாரும்.
தொடர்வாளும்..........    வருவாரும்    (34)   என   வரும்   உம்மைத்
தொடர்களோடு  ‘ஆயினர்’  எனும்  ஒரு  சொல்  சேர்த்துத் தொடரை
முடித்துக்   கொள்க).   மலர்   கொய்து   விளையாடிக்  கொண்டிருந்த
மங்கையர்கள்  மாலைப்   பொழுது   வந்தடைந்ததை  உணர்கின்றனர்.
தங்கள்    கணவன்மாரும்     பணி     முடித்துத்   திரும்புகின்றனர்.
அவர்களோடு  அம்மகளிர்  தங்கும்  இடம்  திரும்புவதைக்  கற்பனைத்
திறத்தோடு    உருவகித்து   அழகூட்டுகிறார்.   மாலைக்    காலத்தில்
பசுக்களைப்  புல்  மேயவிட்டிருந்த   ஆயர்கள்.   ‘இனித்   தொழுவம்
திரும்பலாம்.   என்பதற்கு    அடையாளமாகத்    தம்   குழலில்  ஓர்
இசையினை  எழுப்புவர்.  அது  கேட்டுத் திரும்பிய பசுக்கூட்டங்களோடு
இடையர்   இல்லந்  திரும்புவர்.  அது   போன்று.  மன்மதன் என்னும்
இடையன்.    ‘நீங்கள்   இன்பம்   நுகரும்    நேரம்    வந்துவிட்டது;
திரும்புங்கள்’ என்று  அறிவிக்க.  அங்கங்கே மலர் கொய்து கொண்டும்.
விளையாடிக்      கொண்டுமிருந்த      மடந்தைமார்கள்.      தங்கள்
கணவன்மார்கள்   என்னும்  காளைகளைச்   சூழ்ந்தவாறு   பாடி  வீடு
திரும்பினர் என்பதாம் -  உருவக  அணியை உறுப்பாகக் கொண்டுவந்த
உவமையணி.  “குயியுய்ப்ப” என்பது  வீடு  திருப்புதற்குரிய குழல் ஓசை
அடையாளம்  தெரிவிக்க எனவும்  கூடுதற்குரிய  குறியிடத்திற்  செலுத்த
எனவும் சிலேடைப் பொருள் தந்தது.                           34