பிலம்புக்கு நீங்கு படலம்

கிட்கிந்தா காண்டம்
சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.
பிலம்புக்கு நீங்கு படலம்
( சுக்கிரீவனது கட்டளைப்படி தென்திசை நோக்கிச் சென்ற வானரவீரர்கள் பல இடங்களிலும் சீதையைத் தேடிக்கொண்டு சென்றார்கள்; வழியில் உள்ளதொரு பாலைவனத்திற் புகுந்தார்கள்; அந்த நிலத்தின் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் இல்லாதவராய் அங்குள்ள பிலத்திலே புகுந்து அதன் இருட்செறிவால் வழிதெரியாது திகைத்து, அனுமனின் வாலைப் பற்றிச் சென்று, பின்பு அங்குள்ள நகரத்தில் புகுந்து அங்கு வசித்துவந்த ஒரு தவப் பெண்ணின் உதவியால் யாவரும் அப்பிலத்திலிருந்து வெளிவந்த செய்தியைக் கூறும் பகுதி இது.
வானர வீரர் நான்கு திசைகளுக்கும் செல்லுகிறார்கள்; சென்றவர், விந்தைய மலையின் பக்கங்களில் எல்லாம் தேடுகிறார்கள்; நருமதைக் கரையை வானரர் அடைகிறார்கள்; பின்பு ஏமகூட மலையைச் சார்கின்றார்கள்; அம் மலையை இராவணன் மலையென ஐயுறுகின்றார்கள்; ஆனால், அங்குச் சீதையைக் காணாமல் அந்த மலையிலிருந்து இறங்குகிறார்கள். அங்கதன், அவ் வீரர்களைப் பார்த்து, 'பல பகுதியாகப் பிரிந்து தேடி, மகேந்திர மலையில் வந்து சேருங்கள்' என்று கூறுகிறான். பின்னர், மாருதி முதலியோர் ஒரு சுரத்தை அடைகின்றார்கள். அச்சுரமோ வெம்மை மிகுந்தது. அதனால் வருந்திய வானரர் பிலத்திற்குள் புகுகின்றார்கள்; அங்கே, அவர்கள் இருளில் வருந்துகின்றார்கள்; அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனுமன் அவர்களை அழகிய நகருக்குக் கொண்டு செல்லுகிறான்; அங்கே மனிதர்களைக் காணாது வாரனரர் திகைக்கின்றார்கள்; அப்போது சாம்பன் கலங்கி வருந்துகிறான்; அச் சாம்பனை மாருதி தேற்றுகின்றான். அச் சமயம் அந்நகரின் நடுவில் சுயம்பிரபையைக் காணுகின்றனர்; அச் சுயம்பிரபையைச் சீதையோ என அவர்கள் ஐயுறுகிறார்கள். அவள் அவர்களை வினாவ அதற்கு அவர்கள் விடையளிக்கின்றார்கள். இராமனைப் பற்றி அச்சுயம்பிரபை வினாவ அனுமன் விடையளிக்கின்றான். பின்னர் அவள் அவர்களுக்கு விருந்தளித்துத் தன் வரலாறு கூறுகிறாள்; அனுமனை, இருளிலிருந்து மீளுவதற்கு ஆவன செய்யுமாறு வானரர் வேண்டுகிறார்கள். அனுமன் பேருருக் கொண்டு பிலத்தைப் பிளந்து வானுற ஓங்கி நிற்கிறான்; பின்பு அந்தப் பில நகரை கடலில் எறிகிறான்; சுயம்பிரபை பொன்னுலகம் செல்லுகிறாள்; அவள் சென்றபின், வானரர் பொய்கைக் கரை அடைகின்றார்கள். இவையே இப்படலத்தில் காணக்கிடைக்கும் செய்திச் சுருக்கம் ஆகும்)
சீதையைத் தேடி அங்கதன் முதலிய வீரர்கள் அனுமனுடன் சுக்கிரீவனின் கட்டளைப்படி தென்திசை நோக்கிச் சென்ற பின், வினதன் முதலிய வானரவீரரகள் மற்ற மூன்று திசைக்கும் சென்றார்கள். அவர்களுக்குச் சுக்கிரீவன் விடை கொடுத்து அனுப்பினான்!
இப்படி இருக்க, நாம் இனி தென் திசை செல்லும் வானர வீரர்களைத் தொடர்ந்து செல்வோம்.
தென்திசையில் புறப்பட்ட வானர வீரர்கள் விரைந்து சென்று விந்திய மலையை அடைந்தார்கள். அந்த விந்தைய மலையில் அங்கு உள்ள எல்லாப் பக்கங்களிலும் தனித்தனியாகவும், கூட்டம் கூட்டமாகவும் சீதா தேவியைத் ஒரு பகல் பொழுது முழுவதும் தேடிப் பார்த்தார்கள். ஆனால், அங்கு எங்குமே அவர்களால் சீதையைக் காண முடியவில்லை. பிறகு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு நருமதை ஆற்றின் சுற்று வட்டாரப் பகுதிகள் அனைத்திலும் தேடிப்பார்த்தார்கள் அங்கும் சீதையை அவர்களால் காண முடியவில்லை. பிறகு ஏமகூட மலைக்குப் போனார்கள்.அந்த மலையின் தோற்றத்தைக் கண்டு, அதுவே இராவணனின் இருப்பிடமாக இருக்கும் என்று சந்தேகித்தனர். அந்த சந்தேகமே அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது, உடனே மிகுந்த உற்சாகத்துடன் அந்த மலையின் மீது ஏறத் தொடங்கினார்கள். அந்தப் பரந்த வானர சேனை முழுதும் வீரத்துடன் வருவதைக் கண்டு யானைகளின் கூட்டமும், யாளிகளின் கூட்டமும் அஞ்சி விலகி ஓடின. சிங்கங்களும் அஞ்சி நிலைகெட்டுச் சென்றன. அந்த வானர சேனைகள் அனைத்தும் வெறி கொண்டு அவ்விடத்தில் சீதையை ஒரு பகல் பொழுது முழுவதும் தேடினர். ஆனால்,அது இராவணனின் இருப்பிடமும் இல்லை, அவ்விடத்தில் சீதையும் இல்லை எனக் கண்டவுடன் மிகவும் வருந்தியபடி திரும்பினார்கள். பிறகு தங்களது பயணத்தை மேற் கொண்டு தொடர்ந்தார்கள்.
அப்போது தங்களது பயணத்தை தொடரும் வழியில் அங்கதன் அறிவுரைப்படி ஒரு முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். அதாவது, எல்லோரும் ஒரே இடத்தை நோக்கி சேர்ந்து போய் தேடுவதை விட, குழுக்களாகப் பிரிந்து தேடினால் குறித்த தவணையில் தனக்கு நியமித்துள்ள திசை முழுவதையும் நன்கு தேடி முடிக்கலாம் என்று எண்ணினார்கள். அதன் படி வானர வீரர்கள் குழுக்களாகப் பிரிந்து சென்று சீதா பிராட்டியை தேடிவிட்டு மீண்டும் மகேந்திர மலைக்கு வந்து சேர ஒப்புக்கொண்டனர்
அவர்கள் பிரிந்து சென்ற பின், அனுமனுடன் புறப்பட்ட வானரக் குழு ஒரு கொடிய பாலைவனத்தை அடைந்தார்கள். அங்கே எந்த உயிரினங்களும் காணப்படவில்லை. சூரியனின் வெப்பத்தால் கற்களும் தீப்பிழம்பு போலக் காணப்பட்டன. அங்கு சென்ற வானர வீரர்கள் அனைவருக்கும் வெப்பத்தால் உடல் வேர்த்தது; மேலும் சூரியனின் வெப்பத் தாக்கம் அதிகரிக்க பல வானர வீரர்கள் புழுவைப் போல துடித்தனர். பலர் என்ன செய்வது என்று தெரியாமல் அறிவு இழந்தனர். பிறகு இனி தாங்காது என்று யோசித்த வானர வீரர்கள் அந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏதேனும் நிழல் தங்களுக்கு கிடைக்குமா என்று தேடத் தொடங்கினார்கள். அப்போது சற்று தூரத்தில் ஒரு பெரிய பிளவு துவாரம் தெரிந்தது. உடனே விரைந்து சென்று அதன் வாயிலை அடைந்தார்கள்.
" சீதா பிராட்டியைத் தேடி இந்தப் பாலைவனத்தைக் கடப்பது என்பது முடியாத காரியம். எனவே, இவ்வழியாகப் பாலை வனத்தை கடந்து செல்வதே நல்லது!" எனத் தீர்மானித்தார்கள். எனவே அந்தப் பிளவு துவாரத்தையும் கடந்து அதன் உள்ளே சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் இருட் குகையில் வந்து சிக்கிக் கொண்டார்கள். அதனால் அந்த அடர்ந்த இருளின் காரணமாக அவர்கள் மேலே செல்ல முடியாதவாறு தவித்தனர். உடனே பய உணர்வு அந்த வானர வீரர்களை தொற்றிக் கொண்டது. உடனே அனுமனிடம் தங்களைக் காக்குமாறு வேண்டினார்கள். அனுமன் அதற்கு இணங்கி," கவலைப் படாதீர்கள் வீரர்களே உங்கள் துன்பத்தை நான் போக்குவேன். எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம், ஒருவர் பின் ஒருவராக எனது வாலை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதனை விடாதீர்கள்!" என்று அவர்களுக்கு தெரிவித்தான். அவர்களும் அவ்வாறே மாருதியை பின்பற்றி சென்றார்கள். மாருதியும் மிக கவனமுடன் அந்த அடர்ந்த இருட்டில் அடி மேல் அடி வைத்துச் சென்றான்.
இப்படி மாருதியின் துணையுடன் சென்ற வானர வீரர்கள் அவ்விடத்தில் சிறந்த நகரம் ஒன்றைக் கண்டார்கள். அந்நகரம் இந்திரனின் அமராவதிப் பட்டணம் போலக் காணப்பட்டது. அங்கு உள்ள மாளிகைகள் அனைத்தும் நவரத்தினங்கலாலேயே பெரும்பாலும் அமைக்கப்பட்டு இருந்தது. குலோத்துங்கச் சோழனிடம் பரிசில் பெற்று வந்த புலவர்களின் வீடுகளைப் போல, அந்நகரில் அமைந்து இருந்த வீடுகளில் பொன்னும் பொருளும் அளவற்றுக் கிடந்தன. தவிர, அந்த நகரம் முழுவதும் இயற்கையாக அமைந்த சோலைகளுடன் காணப்பட்டது.
வானர வீரர்கள் அந்த நகரத்தைக் கண்டவுடன் அதுவே இலங்கை மாநகரம் என்று எண்ணினார்கள். அதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்து சீதா தேவியைத் தேட அந்த நகரத்துக்குள் வெகு வேகமாக நுழைந்தனர். அங்கே, ஓர் இடம் விடாமல் எல்லா இடங்களிலும் சீதையைத் தேடினார்கள். அப்படித் தேடிப்பார்த்த போது அவர்கள் பெரிதும் வியப்படைந்தனர். அதற்குக் காரணம் சோலைகளும், தடாகங்களும், செல்வங்களும், நவரத்தின மணிகளும் நிறைந்து இருக்கும் அந்த நகரத்தில் ஒரு பிராணியோ, பறவைகளோ இல்லை மற்ற உயிரினங்கள் கூட அவ்விடத்தில் தென்படவில்லை.
பிலப்பினுள் காணப்பட்ட அந்த நகரத்தைப் பற்றி வானர வீரர்களால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. முதலில் அந்த வானர வீரர்கள், " இவை அனைத்தும் மாயத்தோற்றமோ?" என்று எண்ணினார்கள். பிறகு தாங்கள் கனவில் இல்லை என்பதை உணர்ந்த அந்த வானர வீரர்கள், " நாம் சுவர்க்க லோகத்துக்கு வந்து விட்டோமோ?" என்று ஒருவருக்குள் ஒருவர் பேசத் தொடங்கினர். இன்னும் சில வானர வீரர்கள்," இறந்தால் தானே சுவர்கத்துக்கு வர முடியும்? அப்படி என்றால் நாம் இறந்து விட்டோமோ?" என்று அலறினார்கள். இன்னும் சிலரோ," இது கொடிய இராவணின் ஏற்பாடோ? சீதையை தேடி வருபவர்களை சிக்க வைக்கத் தான் அவன் இவ்வாறு செய்து இருப்பானோ?" என்று சந்தேகம் கொண்டனர். அது கேட்ட பெரும்பாலான வானர வீரர்கள்," எனில், இனி நாம் இதில் இருந்து தப்பிக்க முடியாதோ?" என்று மிகவும் பரிதாபமாகக் கண்கலங்கிக் கேட்டுப் பிறகு அனுமனைப் பார்த்தனர்.
அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அனுமான்," பாலைவனத்தின் நடுவில் இருக்கும் இந்தப் பிலப்பிலிருந்து அப்பால் நாம் கண்டிப்பாகச் செல்வோம். அப்படிப் போக முடியாவிட்டால், சகர புத்திரர்களை விட அதிக வலிமை உடைய நாம், இந்தப் பூமியைக் குடைந்து கொண்டு மேற்புறமாக ஏறி அப்பால் சுகமாகச் சென்று விடுவோம்! அதுவும் முடியாவிட்டால், வஞ்சனையால் இப்படிச் செய்த அரக்கர்கள் அனைவரையும் கொன்று போட்டு வெற்றியுடன் மேலெழுந்து செல்வோம்!" என்று கோபத்துடன் சொன்னான்.
அனுமானின் இந்த வார்த்தைகளால் அந்தக் கணத்தில் எல்லா வானர வீரர்களும் அச்சம் தெளிந்தார்கள். முன்போல் பழைய படி துணிவையும், வீரத்தையும், வலிமையையும் பெற்றார்கள். மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்து அந்த நகரத்தின் மையப் பகுதிக்கு வந்தனர்.
அவ்விடத்தில் ....
அவர்கள் ஒரு புதுமையைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆம்!, சிறந்த தவம் அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணுருவம் கொண்டு வந்தது போல, தவவேடத்துடன் சுயம்பிரபை என்னும் பெயருடைய பெண் ஒருத்தி அவர்களின் கண்ணெதிரே காணப்பட்டாள்!
சுயம்பிரபை மரவுரி உடுத்தி, நீராடுதலுமின்றித் தவத்திலே வெகு காலம் மனதை செலுத்தி இருந்தாள். அதனால், அவளது உடல் முழுதும் மாசு அடைந்து காணப்பட்டது. சுவாசத்தைப் பந்தனம் செய்வதால் மிகவும் அசைகின்ற நுண்ணிய இடையை சிறிதும் அசையாதபடி நிறுத்தி, சாயாத தானபாரங்கள் உள்ளே ஒடுங்க அமர்ந்து இருந்தாள். மேலும் அவள் காமம், குரோதம்,லோபம், மோகம், மதம் , மாற்சரியம் ஆகிய உட்பகைகளை ஒடுக்கிப் பற்றற்று மனத்தை யோகத்தில் செலுத்தி இருந்தாள். வெகு காலம் தவம் செய்த காரணத்தால் அவளுடைய கூந்தல் தொகுதி சடை விழுந்து காணப்பட்டது. அவளைக் கண்ட வானர வீரர்கள் அனுமானிடம்," இவள் நாம் தேடி வந்த சீதா பிராட்டிதானா என்பதைப் பெருமான் கூறிய அடையாளங்களைச் சிந்தித்துப் பார்த்து எங்களுக்குக் கூற வேண்டும் !" என்று சொன்னார்கள்.
அனுமன் உடனே," இவள் நம் பிராட்டி இல்லை! ஏனெனில், பெருமாள் கூறிய அங்க அடையாளங்களை இவள் பெற்று இருக்க வில்லை!" என்றான். அப்பொழுது அவர்களது பேச்சுக்குரலால் தவம் கலைந்த சுயம்பிரபை கண் திறந்து அவர்களைப் பார்த்தாள். அதனைக் கண்ட வானர வீரர்கள் சற்றே பயத்துடன் அவளை வணங்கினார்கள். அவர்களைக் கண்டு மிகவும் கோபம் கொண்ட சுயம்பிரபை அவர்களைப் பார்த்து," நீங்கள் ஒருவராலும் நெருங்க முடியாத இந்தப் பொன்னகரத்தில் வாழ்பவர்கள் இல்லை! அப்படியிருக்க நீங்கள் இங்கே ஏன் வந்தீர்கள்? நீங்கள் யார்? " என்று வினவினாள்.
சுயம்பிரபையின் வார்த்தைகளைக் கேட்ட அனுமான் அவளிடம் ," தாயே! நாங்கள் ஸ்ரீ ராமபிரானின் வானர சேனைகள் துஷ்ட அரக்கர்கள் சீதா பிராட்டியை கடத்திச் சென்றதால் அவர்களைத் தேடி இவ்விடம் வந்தோம்" என்றான்.
அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட சுயம்பிரபை மிகவும் மகிழ்ந்தாள், பின்னர் அவர்களை பேரன்பு கொண்ட பார்வையுடன் நோக்கினாள், பின் மேலும் அவர்களை வரவேற்றாள். அதன் பிறகு, கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக அனுமானிடத்தில்," ஸ்ரீ ராமபிரான் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டாள். வாயு புதல்வன் உடனே சுயம்பிரபைக்கு நடந்த செய்திகள் அனைத்தையும் தெரிவித்தான்.
அனுமன் கூறிய ஸ்ரீ ராமனின் வரலாற்றை எல்லாம் கவனமாகக் கேட்டறிந்த சுயம்பிரபை ," எனது சுயநலம் இல்லாத தவத்துக்கு இப்போது தான் விமோசனம் உண்டானது" என்றாள். பின்னர் அங்கு வந்த அனைத்து வானர வீரர்களையும் தாயன்புடன் நல்லபடியாக உபசரித்தாள். அப்போது அனுமார் சுயம்பிரபையிடம்," தாயே! இந்த நகரம் யாருடையது? இதன் தலைவர் யார்? எங்களைத் தாய் போல அன்புடன் உபசரிக்கும் தாங்கள் யார்? தயவு செய்து அனைத்தையும் கூறி அருளவேண்டும்" என்றான்.
அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட சுயம்பிரபை தனது கதையை கூறத் தொடங்கினாள்," நல்ல குணங்களைக் கொண்ட சுயநலம் இல்லாத அனுமானே கேள். மான் முகமுடைய மயன் காற்றையே உணவாகக் கொண்டு, கடுமையாக தவம் செய்தான். அதன் பயனாக பிரம தேவனால் இந்த நகரம் அவனுக்கு அளிக்கப்பட்டது. அந்த மயன் அசுர சிற்பியாவான். மேலும் அவன் காசியப முனிவரின் மனைவியான தநு என்பவளின் சந்ததி ஆவான். அவன் தேவகன்னிகை ஒருத்தியை விரும்பினான். அவளது பெயர் ஹேமை. அவள் எனது தோழி தான். எனவே அந்த அசுரன் என்னை வேண்டிக் கொள்ள, நான் அவளை பொன்மயமான தேவலோகத்தில் இருந்து இந்த ருட்சபில நகரத்துக்கு கொண்டு வந்து சேர்த்தேன். மயனும், ஹேமையும் வெகு காலங்கள் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்தனர். நானோ எனது தோழியை விட்டுப் பிரிய மனம் இல்லாமல், இந்த இடத்திலேயே தங்கி விட்டேன். இவ்வாறு நாட்கள் பல உருண்டு ஓடியது. அப்படி இருக்கும் போது ஒரு நாள் தேவலோகத்தில் இந்திரன் என்னையும், ஹேமையையும் வெகு காலம் காணாமல், தனது திவ்ய திருஷ்டியின் மூலம் விஷயத்தை அறிந்து இவ்விடம் வந்து சேர்ந்தான்.
இந்திரனைக் கண்ட மயன், ஹேமையை தன்னிடம் இருந்து இந்திரன் பிரித்து விடுவானோ! என எண்ணி, அவனுடன் கடும் யுத்தம் செய்தான். இறுதியில் மயனைக் கொன்றான் இந்திரன். ஹேமையை கோபித்து அறிவுரை பல கூறிய இந்திரன். பின் நடந்த விவரங்களைக் கேட்க. ஹேமை அப்பொழுது இந்திரன் மீது கொண்ட பயத்தில் நடந்த அனைத்து விவரங்களையும் கூற, இந்திரன் சுயம்பிரபையான நானே இதற்கெல்லாம் மூல காரணம் என்பதைக் கேள்விப்பட்டு என் மீது மிகுந்த சினம் கொண்டான். பிறகு என்னை," சுயம்பிரபை, நீ தேவ கன்னிகை ஒருத்தியின் மனத்தைக் கெடுத்து, போயும் போயும் அரக்கனுடன் அவளைக் கூடச் செய்தாய். அதனால், நான் உனக்கு சாபம் தருகிறேன். நீ இனி தேவலோகத்துக்கு வரும் தகுதியை இழந்தாய் அதனால் இந்த நகரத்திலேயே சில காலம் தனித்து இருப்பாயாக!" என்றார்.
உடனே செய்த தவறுக்கு வருத்தப்பட்ட நான் கண்கலங்க இந்திரனிடம் சாப விமோசனம் வேண்டினேன். என் மீது கருணை கொண்ட இந்திரன்," ஸ்ரீ ராமபிரானின் கட்டளையை ஏற்று வானரவீர்கள் இங்கு வரும் பொழுது உனது துன்பம் தீரும்!" என்று சாப விமோசனம் அருளி மறைந்தார்...அண்ணலே! எனக்கு இங்கே உண்பதற்கு கனி முதலான பொருள்கள் உள்ளன; பூசிக் கொள்வதற்கு கலவைச் சந்தனம் ஆகியவை உள்ளன; சூடிக் கொள்ள நறுமணம் மிக்க மலர் மாலைகள் உள்ளன; மற்றும் பல ஆடை ஆபரணங்கள் அனைத்தும் உள்ளன. ஆயினும் அவற்றை எல்லாம் நான் அனுபவிக்காது பற்றே இல்லாத மனத்துடன், காலங்கள் பல உருண்டோட, அந்த நாளும் வந்திடாதோ? என சாப விமோசனத்துக்கான நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தேன். ஹனுமானே இப்போது உம்மாலும், உமது வானர
பிறகு மீண்டும் அனுமனைப் பார்த்து சுயம்பிரபை," அனுமனே இன்னொன்றையும் கேட்பாயாக, இந்தப் பிலமானது நூறு யோசனை தூரம் பரந்த வடிவமுடையது. இதில் இருந்து மேலேயுள்ள உலகத்துக்கு ஏறிச் செல்லும் வழியை அறியேன். எனக்கு நீங்கள் உதவி செய்தால், நான் ஈடேற்றம் அடைவேன். அதற்கு உரிய வழியை உங்கள் மனத்தில் சிறிது சிந்தித்துப் பார்ப்பீர்களாக!" என்று வேண்டினாள்.
அவளுடைய கதையைக் கேட்ட அனுமன், அவள் மேல் பெரும் பக்தி கொண்டு. அவள் திருவடி தொட்டு வணங்கி," தாயே தங்களது விருப்பத்தை உடனே நிறைவேற்றுகிறேன்" என்று வாக்குறுதி அளித்தான். அச்சமயம் அனுமனுடன் வந்த வானர சேனையும்," ஐயனே! நீர் இப்பிலத்தில் இருந்து நாம் வெளியில் செல்வதற்கான உபாயத்தை செய்யுங்கள்" என்று வேண்டினார்கள்.
வாயு புத்திரன் தன்னுடன் வந்த அந்த வானர வீரர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளைக் கூறினான். பின் அனுமன் முன்பு இராம லக்ஷ்மணர்களுக்குக் காட்டிய அதே பேருருவம் கொண்டான். அச்சமயம் தனது இரண்டு கைகளும் கோரதந்தம் போல் விளங்க, பூமியினுள் இருந்த பிலத்தில் இருந்து கண்டவர் கலங்கும் படி நிலத்தைப் பிளந்து வெளி வந்தான். அச்செயலால் ஒரு புது வழியை அனுமன் உருவாக்கினான். அனுமன் உருவாக்கிய அந்த வழியின் வழியாகவே வானர சேனைகளும், தேவி சுயம்பிரபையும் அப்பிலத்தில் இருந்து வெளியே வந்தார்கள். பிறகு அந்தப் பில நகரில் இனி யாரும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று எண்ணி அதனை அப்படியே தமது பலம் கொண்டு பெயர்த்து எடுத்து சமுத்திரத்தில் தூக்கி வீசினான் அனுமன். அப்போது, அனுமனின் பலத்தைக் கண்டு தேவர்களும் ஆச்சர்யம் கொண்டனர்.
இவ்வாறாக பூமியின் மேல் வந்த சுயம்பிரபை, அவர்களிடம் விடைபெற்று அனுமனைப் பலவாறு புகழ்ந்து தேவலோகம் புறப்பட்டுச் சென்றாள். பிறகு வானர வீரர்களும் தாங்கள் செல்ல வேண்டிய பாதையை நிதானித்து அறிந்து அந்த வழியாகத் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. அனுமன் தலைமையில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்கள் அனைவரும் ஒரு பொய்கைக் கரைக்குப் போய்ச் சேர்ந்தார்